அதிமுகவை தொடர்ந்து பாஜ கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகல்: தெலுங்கு தேசம் கட்சியுடன் சேர்ந்து போட்டி

திருமலை: அதிமுகவை தொடர்ந்து பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி விலகியுள்ளது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் அணி சேர்ந்து போட்டியிட போவதாக பவன் கல்யாண் அறிவித்தார். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட பிறகு அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சந்திரபாபுவை சிறையில் சந்தித்த பின் நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கப்போவதாக அறிவித்தார்.

இந்நிலையில், கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினத்தில் உள்ள பெடனாவில் நேற்று நடந்த வாராஹி ரோட் ஷோ கூட்டத்தில் பவன்கல்யாண் பேசுகையில், ‘பாஜ கூட்டணியில் உள்ள நிலையில் சிரமம் இருந்தாலும் தெலுங்கு தேசம் கட்சியின் அனுபவமும், ஜனசேனா கட்சியின் இளம் ரத்தம், போராட்டத் திறமையும் ஒன்று சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளும். இந்த கூட்டணியில் யார் வந்தாலும் சேர்த்து செயல்படுவோம் எனக்கூறினார்.

பாஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக பவன் கல்யாண் அதிரடியாக அறிவித்துள்ளது ஆந்திரா அரசியலில் பெரும பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணியில் இருந்து நடிகர் பவன் கல்யாண் விலகியது குறித்து ஆந்திரா மாநில பாஜ தலைவர்கள் யாரும் கருத்து கூற முன்வரவில்லை. ஜனசேனாவுடனான கூட்டணியை தேசிய தலைமை பார்த்துக்கொள்ளும் என்று கூறினர். பாஜ கூட்டணியில் இருந்து அண்மையில் விலகுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இப்போது, தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் தனது கூட்டணி கட்சியை பாஜ இழந்துள்ளது.

The post அதிமுகவை தொடர்ந்து பாஜ கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகல்: தெலுங்கு தேசம் கட்சியுடன் சேர்ந்து போட்டி appeared first on Dinakaran.

Related Stories: