முன்விரோதத்தால் மோதல்; உ.பி பல்கலை. விடுதியில் துப்பாக்கி சூடு: 3 மாணவர்கள் படுகாயம்

அலிகார்: உத்தர பிரதேச பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். உத்தர பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இரண்டு தனித்தனி விடுதிகள் உள்ளன. அந்த விடுதிகளில் தங்கி படிக்கும் இரு பிரிவு மாணவர்களிடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக விளம்பரப் பொறுப்பாளர் பேராசிரியர் அசிம் சித்திக் கூறுகையில், ‘மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 3 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. அவர்கள் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த 3 மாணவர்களும் அலிகார் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் கூட, அவர்கள் விடுதி மாணவர்கள் அல்ல. இரவு நேரத்தில் அவர்கள் எப்படி விடுதிக்குள் நுழைந்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

முன்விரோதம் காரணமாக இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையேயான பிரச்னை இருந்து வந்தது’ என்றார். இச்சம்பவம் தொடர்பாக சிலரது மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறினார். பல்கலைக்கழக விடுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததால், தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post முன்விரோதத்தால் மோதல்; உ.பி பல்கலை. விடுதியில் துப்பாக்கி சூடு: 3 மாணவர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: