வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் வசதிக்காக பேட்டரி வாகனங்களை அதிகரிக்க திட்டம்: வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ தகவல்

 

சென்னை: இந்தியாவில் மிகப்பெரிய மற்றும் பழமையான உயிரியல் பூங்காக்களில் 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா முக்கியமானது. இதற்கு ‘‘சிறந்த உயிரியல் பூங்கா எனும் அங்கீகாரம் கடந்தாண்டு வழங்கப்பட்டது. பூங்காவில் 3 ஆண், 4 பெண் சிங்கங்கள் என மொத்தம் 7 சிங்கங்கள் உள்பட 1,977 வன விலங்குகள் உள்ளன. மேலும், உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீன்வளங்களுக்கான உலக சங்கம் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவை விரிவுபடுத்தியுள்ளது. அதேபோல, ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையத்தால் சிறந்த உயிரியல் பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டு ஒன்றிற்கு 20 லட்சம் பார்வையாளர்கள் தினசரி வந்து செல்கின்றனர்.

பூங்காவில் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் ஏ.சி. பஸ்கள் வாங்கப்பட்டு, சிங்கங்கள் உலாவும் பகுதிகளை வனத்துறையினர் நவீனப்படுத்தி மீண்டும் அந்த சேவை லயன் சபாரி தொடங்கி வைக்கப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட விலங்குகளுக்கான அறுவை சிகிச்சை அரங்கில் மேம்படுத்தப்பட்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த சிகிச்சை மையத்தின் மூலம் பறவைகள், சிறிய விலங்குகள் முதல் சிங்கம் மற்றும் புலிகள் வரை பெரிய விலங்கினங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தவிர, தொடர் விடுமுறை காரணமாக கடந்த மூன்று நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் குடும்பமாக பூங்காவிற்கு வந்து விலங்குகளை கண்டுகளித்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு கூறியதாவது: வண்டலூர் பூங்காவில்பார்வையாளர்களுக்கு எளிதான முறையில் நுழைவுச்சீட்டு பெற்று செல்லும் வகையில் க்யூ-ஆர் கோடு குறியீடு அடிப்படையிலான நுழைவுச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதேபோல், தொடர்ந்து பண்டிகை காலங்கள் வரக்கூடிய சூழலில் பொதுமக்களின் வருகை என்பது அதிகரிக்க கூடும் என எதிர்ப்பார்க்கிறோம். ஏனெனில், கடந்த வாரம் தொடர் விடுமுறை காரணமாக அதிகப்படியான பார்வையாளர்கள் வருகை என்பது கணிசமாக உயர்ந்துள்ளது.

இதில் பெண்கள், முதியோர் மற்றும் குழந்தைகள் பூங்காவிற்கு வருவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, ஆயுதப்பூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் வர உள்ள நிலையிலும், பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்தவும் கூடுதலாக பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி, ஒரு பேட்டரி வாகனத்தில் 10 முதல் 12 பேர் வரை பயணம் மேற்கொள்ளலாம். இவைமட்டுமின்றி பூங்காவிற்கு வரக்கூடிய பொதுமக்கள் விலங்குகளை எளிதில் பார்வையிடுவதற்கான நவீன தடுப்புகளை அமைக்கும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

* விலங்குகளின் பட்டியல்

பாலூட்டிகள்: ஆசிய யானை, ஆசிய சிங்கம், ஆசிய காட்டு கழுதை, பரசிங்க, வங்காள புலி, பிந்துரோங், பிளாக்பக், கருப்பு ராட்சத அணில், போனட் மாக்காக், சிம்பன்சி, சித்தல், பனை சிவெட், யூரோப் நீர் நாய், கவுர், கிராண்டின் வரிக்குதிரை, சாம்பல் மெல்லிய லோரிஸ், இமயமலை கருப்பு கரடி, நீர் யானை, இந்திய முகடு முள்ளம்பன்றி, இந்திய ராட்சத அணில், இந்திய சாம்பல் முங்கூஸ், இந்திய பன்றி மான், இந்திய சிறுத்தை, இந்திய ஓநாய், காட்டுப்பூனை, சிங்கவால் மக்காக், சோம்பல் கரடி, நீலகிரி லங்கூர், டஃப்டெட் கபுச்சின், காட்டுப்பன்றி மற்றும் மஞ்சள் பபூன்.

பறவைகள்: அலெக்ஸாண்ட்ரின் கிளி, கருப்பு கிரீடம் அணிந்த இரவு ஹெரான், கருப்பு தலை ஐபிஸ், கருங்கழுத்து நாரை, கருப்பு அன்னம், புட்கிரிகர், தீக்கொழி, பெசண்ட், டெமோசெல் கொக்கு, ஈமு, பிஷ்ஷரின் காதல் பறவை, ரோஜா வளையம் கொண்ட கிளி, வெள்ளை வயிறு உடைய கடல் கழுகு மற்றும் வெண்ணிறக்கழுகு. ஊர்வன: கரியல், இந்திய நாகப்பாம்பு, இந்திய மலைப்பாம்பு, இந்திய நட்சத்திர ஆமை, ராஜ நாகம், குவளை முதலை, உப்பு நீர் முதலை மற்றும் கண்கவர் கெய்மன்.

* கட்டணம் குறைக்க கோரிக்கை

பெரியவர்களுக்கு நுழைவு கட்டணம் ரூ.200, பேட்டரி வாகன கட்டணம் ரூ.150, சபாரி வாகன கட்டணம் ரூ.150 என நிர்ணயம் செய்யப்பட்டன. இந்த கட்டணங்களை குறைக்க வேண்டும் என பூங்காவிற்கு வரக்கூடிய பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் வசதிக்காக பேட்டரி வாகனங்களை அதிகரிக்க திட்டம்: வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ தகவல் appeared first on Dinakaran.

Related Stories: