ராமர் பாலம் அமைந்துள்ள இடத்தில் சுவர் அமைக்க கோரிய மனு உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு

புதுடெல்லி: ராமர் பாலம் அமைந்துள்ள இடத்தை பொதுமக்கள் அனைவரும் சுலபமாக சென்று பார்க்கும் விதமாக சுவர் அமைக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராமர் சேது பாலம் தொடர்பாக சுப்ரமணியசுவாமி தொடர்ந்த பிரதான வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் ராமர் பாலம் குறித்து நடவடிக்கையை எடுத்து வருவதாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் இந்து தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் அசோக் பாண்டே என்பவரது தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘ராமர் பாலம் அமைந்துள்ள பகுதியில் பொதுமக்கள் அனைவரும் சுலபமாக சென்று பார்க்கும் விதமாக ஒரு சுவர் எழுப்ப வேண்டும். மேலும் ராமர் பாலம் தொடர்பான பிரதான வழக்கோடு, எனது இடைக்கால மனுவையும் இணைத்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் சுதன்சு துலியா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘‘ராமர் சேது பாலம் என்பது கட்டுமான பணி தொடர்பானதாகும். மேலும் அது அரசின் கொள்கை சார்ந்த ஒன்றாகும். அதில் எப்படி உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவையெல்லாம் எங்களுக்கான வேலை கிடையாது. மேலும் இந்த இடைக்கல மனு விசாரணைக்கு உகந்தது கிடையாது என்பதால் பிரதான வழக்கோடும் இணைக்க முடியாது’’ என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள்,மனுதாரருக்கு தேவையென்றால் ஒன்றிய அரசின் துறை சார்ந்த அமைச்சகத்திற்கு சென்று கோரிக்கை வைக்கலாம் எனக்கூறி, இடைக்கால மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post ராமர் பாலம் அமைந்துள்ள இடத்தில் சுவர் அமைக்க கோரிய மனு உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: