ஆவடியில் மாரத்தான் போட்டி

ஆவடி: சென்னை பெருநகர காவல்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் இணைந்து, ஆவடி இரவு மாரத்தான்-2023, பாகம்-2 போட்டியை ஆவடியில் வேல் டெக் மைதானத்தில் சென்னை பெருநகர ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்றிரவு கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் முன்னிலை வகித்தார்.

பொதுமக்களிடையே உடல் ஆரோக்கியம் மற்றும் ‘போதையில்லா தமிழகம்’ என்பதே இந்த போட்டியின் நோக்கமாகும். 21 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ. ஆகிய 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் தொடங்கி, மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக நெமிலிச்சேரி சுங்கச்சாவடி வழியாக மீண்டும் வேல் டெக் பல்கலைக்கழகத்தில் முடிவடைந்தது. இதில் வீரர்களுக்கு அனைத்து போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. உணவு, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

போட்டியில் 5 கி.மீ. தூர மாரத்தான் பிரிவுக்கு 15 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 கி.மீ. மற்றும் 21 கி.மீ. தூர மாரத்தான் பிரிவுகளுக்கு 8 வயதுக்கு மேற்பட்டோருக்கும் அனுமதி வழங்கப்பட்டு கலந்து கொண்டனர். சுமார் 6,000 பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசு பெற்ற பெண் காவலர் அனுபிரியா, 2ம் பரிசு வெற்றி பெற்ற பெண் காவலர் நீலாம்பரி, 3ம் பரிசு வெற்றி பெற்ற பெண் காவலர் இளவரசி ஆகியோருக்கு பதக்கங்கள், பண வெகுமதிகள் மற்றும் சான்றிதழ்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார்.

The post ஆவடியில் மாரத்தான் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: