ரூ. 1.55 கோடி முறைகேடு புகார்; நடிகர் விவேக் ஓபராயின் நிறுவன பங்குதாரர் கைது

மும்பை: 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் நடிகர் விவேக் ஓபராயின் முன்னாள் தொழில் பங்குதாரரான சஞ்சய் சாஹாவை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், ‘ஓபராய் மெகா என்டர்டெயின்மென்ட்’ என்ற பெயரில் ஈவண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிறுவனத்தின் பங்குதாரர்களாக சஞ்சய் சாஹா, நந்திதா சாஹா, ராதிகா நந்தா உள்ளிட்டோர் இருந்தனர்.

இந்நிலையில் நிறுவனத்தின் பங்குதாரரான சஞ்சய் சாஹா என்பவர், தான் முதலீடு செய்த பணத்தை தவறான ஆதாயங்களுக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து விவேக் ஓபராயின் தனி செயலாளர் தேவன் பாஃப்னா என்பவர் மும்பை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சஞ்சய் சாஹாவின் மீது ஐபிசி 420, 406, 409, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து மும்பை போலீஸ் டிசிபி தத்தா நலவாடே கூறுகையில், ‘கடந்த ஜூலை மாதத்தில் நடிகர் விவேக் ஓபராயின் நிறுவன பங்குதாரர் மீது ரூ. 1.55 கோடி முறைகேடு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் எம்ஐடிசி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் சாஹாவை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

The post ரூ. 1.55 கோடி முறைகேடு புகார்; நடிகர் விவேக் ஓபராயின் நிறுவன பங்குதாரர் கைது appeared first on Dinakaran.

Related Stories: