15 அடி உயர ராட்சத ரோபோவை வடிவமைத்துள்ள ஜப்பான் நிறுவனம்: பேரிடர் மீட்பு பணி, விண்வெளி துறையில் பயன்படும்..!!

டோக்கியோ: ஜப்பானை சேர்ந்த ஸ்டாட் அப் நிறுவனம் 15 அடி உயர ராட்சத ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளது. மனித வடிவ ரோபோ மற்றும் வாகனம் போல் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ பேரிடர் கால மீட்பு பணிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 15 அடி உயரத்திற்கு 4 சக்கரங்களுடன் சுபாமே நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ராட்சத ரோபோவின் பெயர் ஆர்சாக்ஸ். விமானத்தை விமானி இயக்குவது போல், ரோபோவின் உள்ளேயே மனிதன் அமர்ந்து இயக்கும் வகையில் இந்த நவீன ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது அனிமேஷன், ரோபோடிக் மற்றும் ஆட்டோ மொபைல் துறைகளுக்கு பயன்படும் விதமாக மொபைல் சூட் கண்டம் என்ற ஜப்பான் அனிமேஷன் தொடரை தழுவி நிறுவனம் இதனை உருவாக்கியிருக்கிறது. வாகனம் மற்றும் ரோபோ என இருவேறு விதமாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மனித எந்திரத்தை போல், மேலும் 4 ராட்சத மனித ரோபோக்களை உருவாக்கி அக்டோபர் இறுதியில் காட்சிப்படுத்த உள்ளதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இவற்றின் விலை தலா 25 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

மூன்றரை டன் எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அந்நிறுவன சிஇஓ ரியோ யோஷிடா கூறுகையில், இது தான் ஜப்பான் என்று சொல்லும் ஒன்றை உருவாக்க விரும்பினேன். அதன் விளைவு தான் ஆர்சாக்ஸ் ரோபோ. இதனை பேரிடர் மீட்பு பணி இடங்கள், விண்வெளி பணிகளுக்கு பயன்படுத்த முடியும். இது தவிர, பன்னோக்கு வேலைகளை செய்யும் மனித இயந்திரமாகவும், பிற ரோபோக்களுடன் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறினார்.

The post 15 அடி உயர ராட்சத ரோபோவை வடிவமைத்துள்ள ஜப்பான் நிறுவனம்: பேரிடர் மீட்பு பணி, விண்வெளி துறையில் பயன்படும்..!! appeared first on Dinakaran.

Related Stories: