மாதவரம் மண்டலத்தில் 2 ஆண்டாக மூடிக்கிடக்கும் நகர்ப்புற நலவாழ்வு மையம்: பயன்பாட்டுக்கு கொண்டு வர மக்கள் வலியுறுத்தல்

 

திருவொற்றியூர், அக்.2: 2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 29வது வார்டுக்குட்பட்ட பொன்னியம்மன் மேடு பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் அமைத்து தர வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் கார்த்திக் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்று ₹22 லட்சம் செலவில் மாதவரம் பொன்னியம்மன்மேடு, பனை சாலை, நேதாஜி தெருவில் மாநகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் கடந்த 2021 டிசம்பர் மாதம் நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டப்பப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் நகர்ப்புற நல வாழ்வு மையம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி, காய்ச்சல், காசநோய் பரிசோதனை போன்றவைகளுக்காக ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது.

மேலும் திறக்கப்படாமல் உள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தின் கான்கிரீட் தரையில் அமர்ந்து சமூக விரோதிகள் மது அருந்துவதும், இரவு நேரங்களில் அங்கேயே படுத்து உறங்குவதுமாக உள்ளனர். எனவே நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து, மருத்துவ சிகிச்சை பணிக்காக பயன்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மேயருக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாதவரம் மண்டலத்தில் 2 ஆண்டாக மூடிக்கிடக்கும் நகர்ப்புற நலவாழ்வு மையம்: பயன்பாட்டுக்கு கொண்டு வர மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: