மாலத்தீவு அதிபர் தேர்தலில் முகமது முயிஸ் 53% வாக்குகளுடன் வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து

மாலே: மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான முகமது முயிஸ் 53% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு இந்தியப் பெருங்கடலில் 1200க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடாகும். இங்கு நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான இப்ராகிம் முகமது சோலிக்கும் அவரை எதிர்த்து மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் முகமது முயிஸ் போட்டியிட்டனர்.
இதில் எதிர்க்கட்சி வேட்பாளரான முயிஸ் 53% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். சோலிக் 46% வாக்குகள் மட்டுமே பெற்றார். மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் பண மோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் சிக்கி சிறையில் இருப்பதால் அவர் போட்டியிட கூடாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தை தொடர்ந்து, முயிஸ் போட்டியிட்டார்.

கடந்த 2018ம் ஆண்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட சோலிக் இந்திய ராணுவம் மாலத்தீவில் தடையின்றி இருக்க அனுமதித்திருந்தார். அதே நேரம், முயிஸ் மற்றும் அவர் சார்ந்திருக்கும் மக்கள் ஜனநாயக கட்சி தீவிர சீனா ஆதரவாளர்களாக கருதப்படுகிறது. வெற்றி பெற்றால் இந்திய ராணுவத்தை மாலத்தீவில் இருந்து திரும்ப பெற வைப்பதாகவும் இந்தியா உடனான வர்த்தகத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளார். அதே கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் யாமீன் சீனாவின் பட்டுப்பாதை வழித்தடத் திட்டத்தில் மாலத்தீவையும் ஒரு நாடாக இணத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிர சீன ஆதரவாளர் மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று வெளியுறவுத் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* உறவை வலுப்படுத்த இந்தியா உறுதி

பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், “மாலத்தீவின் அதிபராக வெற்றி பெற்ற முகமது முயிஸ்க்கு வாழ்த்துகள். இந்தியா-மாலத்தீவு இடையேயான நீண்ட கால இருதரப்பு உறவை வலுப்படுத்தவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மாலத்தீவின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்தியா உறுதியுடன் உள்ளது,” என்று கூறியுள்ளார்.

The post மாலத்தீவு அதிபர் தேர்தலில் முகமது முயிஸ் 53% வாக்குகளுடன் வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: