அரியவகை நரம்பியல் நோயால் கை, கால் செயலிழந்த வாலிபரை நடக்க வைத்த அரசு டாக்டர்கள்

நெல்லை: தென்காசியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (32). சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு ‘குள்ளியன் பரி சின்ரோம்‘ (guillain barre Syndrome) என்ற அரியவகை நரம்பியல் நோய் பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர். உலகளவில் 10 லட்சம் பேரில் 10 பேருக்கு தான் இந்த நோய் பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்‌.

இந்நோய் பாதிப்பால் முதலில் கால்களும், அதன் பின்னர் கைகளும் செயலிழந்து விடும். மருத்துவமனையில் சேர்ந்த 4 நாட்களில் கிருஷ்ணமூர்த்தியின் உடல்நிலை மோசமானதால் மருத்துவத்துறை தலைவர் ராஜகோபால மார்த்தாண்டம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு 80 நாட்களாக வென்டிலேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கிருஷ்ணமூர்த்தி இயல்பாக நடக்கும் அளவிற்கு குணமடைந்தார். இந்திய அளவில் இம்மாதிரியான அரியவகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை எழுந்து நடக்கும் அளவிற்கு காப்பாற்றியது சாதனை என அரசு மருத்துவமனை டீன் ரேவதி பாலன் தெரிவித்தார்.

மருத்துவத்துறை தலைவர் ராஜகோபால மார்த்தாண்டம் கூறுகையில், கிருஷ்ணமூர்த்திக்கு பிளாஸ்மா பெரிசிஸ் என்ற உயர் ரக சிகிச்சை 4 முறை செய்யப்பட்டது. இதற்கு ஆரம்ப கால சிகிச்சைக்கே ரூ.1 லட்சம் தேவைப்பட்டிருக்கும்.
மேலும் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை செய்வதற்கு ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 80 நாளைக்கு ரூ.40 லட்சம் செலவாகி இருக்கும். தமிழ்நாடு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இலவசமாக கிருஷ்ணமூர்த்திக்கு செய்ய முடிந்தது. தற்போது அவர் ட்ரக்கியாமி எனப்படும் செயற்கை சுவாச குழாய் மூலம் சுவாசம் செய்கிறார். இது 3 மாதம் தொடரும். அதன்பின் அவர் இயல்பாக பேசத் துவங்குவார் என்றார்.

The post அரியவகை நரம்பியல் நோயால் கை, கால் செயலிழந்த வாலிபரை நடக்க வைத்த அரசு டாக்டர்கள் appeared first on Dinakaran.

Related Stories: