கேரள அதிகாரிகள் குழு விசாரணை திருப்பூரை சேர்ந்தவர்களுக்கு ரூ.25 கோடி கிடைக்குமா?

திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் பிளாக்கில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்குத் தான் ரூ.25 கோடி பரிசு கிடைத்தது என புகார் எழுந்ததைத் தொடர்ந்து கேரள அரசு லாட்டரித் துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். கேரள அரசு லாட்டரி ஓணம் பம்பர் குலுக்கலில் முதல் பரிசு ரூ.25 கோடி திருப்பூரைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் உள்பட 4 பேர் வாங்கிய டிக்கெட்டுக்கு கிடைத்தது. வெளி மாநிலங்களில் கேரள அரசு லாட்டரி விற்பனை இல்லை என்பதால் வெளி மாநிலத்தவர்களுக்கு பரிசு விழுந்தால் கேரளாவில் டிக்கெட் வாங்கியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தால் மட்டுமே பரிசுத் தொகை கிடைக்கும்.

பரிசு விழுந்த 4 பேரும் கேரளாவிலிருந்து டிக்கெட்டுகளை வாங்கி தமிழ்நாட்டில் பிளாக்கில் விற்பனை செய்தனர் என்றும், அதில் ஒரு டிக்கெட்டுக்கு பரிசு கிடைத்திருப்பதால் அவர்களுக்கு பணத்தை கொடுக்கக் கூடாது என்றும் கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த அம்புரோஸ் என்பவர் கேரள முதல்வர் மற்றும் லாட்டரித் துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பினார். இதைத் தொடர்ந்து திருப்பூரை சேர்ந்தவர்களுக்கு பரிசுத்தொகை கிடைப்பதில் சிக்கல் உருவானது. பிளாக்கில் டிக்கெட் வாங்கியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்த கேரள லாட்டரித் துறை தீர்மானித்தது. கேரள லாட்டரித் துறை இயக்குனர் ஆபிரகாம் ரென் தலைமையில் 7 பேர் கொண்ட குழு இது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளது. விசாரணையில் 4 பேரும் கேரளாவுக்கு வந்து லாட்டரி வாங்கியது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு பரிசுத் தொகையை கொடுப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்று கேரள அரசு லாட்டரித் துறை அதிகாரி தெரிவித்தார்.

The post கேரள அதிகாரிகள் குழு விசாரணை திருப்பூரை சேர்ந்தவர்களுக்கு ரூ.25 கோடி கிடைக்குமா? appeared first on Dinakaran.

Related Stories: