காங்கிரஸ் தலைமையகத்தில் நடிகையின் தலைமுடியைப் பிடித்து இழுத்து தள்ளிய நிர்வாகிகள்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையகத்தில் கார்கே, பிரியங்கா ஆகியோரை நேரில் சந்திக்கச் சென்ற நடிகை அர்ச்சனா கவுதம் என்பவரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து தள்ளியதால் அவரும், அவரது தந்தையும் அங்கிருந்து வெளியேறினர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை வேட்பாளரும், நடிகையுமான அர்ச்சனா கவுதம், நேற்று முன்தினம் டெல்லியிலுள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு தனது தந்தையுடன் சென்றிருந்தார்.
அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கமிட்டி அலுவலகத்துக்கு வெளியே நின்றிருந்தனர். அவர்கள் அர்ச்சனா கவுதமின் தந்தையை மட்டும் கமிட்டி அலுவலகத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.

ஆனால், அர்ச்சனா கவுதமை உள்ளே அனுமதிக்க முடியாது என்று தடுத்துவிட்டனர். ஆனால், அர்ச்சனா கவுதம் விடவில்லை. தானும் உள்ளே செல்வேன் என்று அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு நின்றிருந்த பெண் நிர்வாகிகள் சிலர், அர்ச்சனா கவுதமை தள்ளிவிட்டனர். அப்போதும் அவர்களது ஆத்திரம் தீரவில்லை. தொடர்ந்து அர்ச்சனா கவுதமின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளினர். அவரது தந்தையையும் சிலர் அங்கிருந்து தள்ளினர். இதையடுத்து தந்தையும், மகளும் புலம்பியபடியே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க அரச்சனா கவுதம் மறுத்துவிட்டார். முன்னதாக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவிப்பதற்காக அர்ச்சனா கவுதமும், அவரது தந்தையும் கட்சி தலைவர் கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்ததாகவும், அப்போது அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் அர்ச்சனா கவுதம் மற்றொரு பேட்டியில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்க மாட்டேன் என்றும், மேலும் போராடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post காங்கிரஸ் தலைமையகத்தில் நடிகையின் தலைமுடியைப் பிடித்து இழுத்து தள்ளிய நிர்வாகிகள் appeared first on Dinakaran.

Related Stories: