ரமேஷ் பிதுரியின் அநாகரீக பேச்சு விவகாரம் பிரதமர் மோடிக்கு டேனிஷ் அலி எம்பி கடிதம்

புதுடெல்லி: பாஜ உறுப்பினர் ரமேஷ் பிதுரிக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். மிரட்டல் அதிகரித்துள்ளதால் கூடுதல் பாதுகாப்பு தர வேண்டும் என பாதிக்கப்பட்ட டேனிஷ் அலி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். புதிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சந்திரயான்-3 வெற்றி குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது குறுக்கிட்டு பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலியை பாஜ நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி தகாத வார்த்தைகளால் பேசினார்.

இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. ரமேஷ் பிதுரியின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதுடன், அவருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்தார். டேனிஷ் அலி தன் குறுக்கீட்டு பேச்சின் மூலம் ரமேஷ் பிதுரியை ஆவேசப்பட தூண்டியதாக மக்களவை பாஜ உறுப்பினர் நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பான புகார்கள் அனைத்தையும் விசாரிக்க பாஜ நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் குமார் சிங் தலைமையிலான உரிமை மீறல் குழுவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பரிந்துரைத்துள்ளார். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தன்னை அநாகரீகமாக பேசிய ரமேஷ் பிதுரிக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என டேனிஷ் அலி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் நடந்த இந்த தாக்குதல் தனி நபரான என் மீதான தாக்குதல் மட்டுமல்ல. ஜனநாயக சராம்சத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். அவையில் நடந்த நிகழ்வுகள் பற்றி அனைவருக்கும் தெரிந்தாலும் சில பாஜ உறுப்பினர்கள் எனது நடத்தை குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அரசியல் சார்புகளை பொருட்படுத்தாமல், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சுதந்திரமான பேச்சு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வது நாடாளுமன்ற தலைவர் என்ற முறையில் பிரதமரின் பொறுப்பு. அவையில் நடந்த சம்பவத்துக்கு, அவைக்கு வௌியே முகம் தெரியாத நபர்கள் எனக்கு மிரட்டல் மற்றும் அச்சுறுத்தும் செய்திகளை அனுப்புகின்றனர். இந்த விவகாரத்தில் ரமேஷ் பிதுரியின் நடவடிக்கையை கண்டித்து பிரதமர் மோடி பகிரங்க அறிக்கை வௌியிட வேண்டும். பிதுரிக்கு உரிய தண்டனை தர வேண்டும். எனக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ரமேஷ் பிதுரியின் அநாகரீக பேச்சு விவகாரம் பிரதமர் மோடிக்கு டேனிஷ் அலி எம்பி கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: