காங்கிரஸ் எம்எல்ஏ கைதால் சர்ச்சை இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி விலகாது: அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

புதுடெல்லி: எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி உறுதியாக இருப்பதாகவும், அதில் இருந்து விலகாது என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு நடந்து வருகின்றது. இந்நிலையில் போலாத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான சுக்பால் சிங் கைராவை 2015ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். காங்கிரஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியானது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் நடந்து கொள்வதாக பஞ்சாப் காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது. ஆனால் சட்டரீதியான நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி இந்த குற்றச்சாட்டை நிராகரித்துவிட்டது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,‘‘எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்த இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி உறுதியாக இருக்கிறது. கூட்டணியில் இருந்து விலக மாட்டோம். கூட்டணி தர்மத்தை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம். எம்எல்ஏ கைது குறித்து கேள்விப்பட்டேன். ஆனால் அது குறித்த விவரங்கள் என்னிடத்தில் இல்லை. முதல்வர் பகவந்த்மான் அரசானது இளைஞர்களை அழிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இதில் செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், சிறிய நபராக இருந்தாலும், தப்பிக்க முடியாது. என்னிடம் சரியான விவரங்கள் இல்லாதநிலையில் எந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை பற்றியும் நான் கருத்து தெரிவிக்கவில்லை” என்றார். 2024ம் ஆண்டு பொது தேர்தலில் பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பதற்கு அம்மாநில காங்கிரஸ் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

* பார்க்க அனுமதிக்கவில்லை
கைது செய்யப்பட்ட எம்எல்ஏ சுக்பால் சிங் கைரா, பசில்காவின் ஜலலாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 2 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக சட்டப்பேரவை காங்கிரஸ் எதிர்கட்சி தலைவரான பிரதாப் சிங் பஜ்வா, மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் நேற்று சென்றனர். ஆனால் சுக்பாலை சந்திப்பதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை.

The post காங்கிரஸ் எம்எல்ஏ கைதால் சர்ச்சை இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி விலகாது: அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: