தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான பொற்கிழி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, 500 கிராமிய கலைஞர்களுக்கு இசை கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கிட தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி, நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 1000 கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 நிதியுதவிக்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

2021-22ம் ஆண்டிற்கான சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மானிய கோரிக்கையில், கலைமாமணி விருது பெற்றவர்களில் வயோதிக நிலையில், பொருளாதாரத்தில் நலிந்து, இன்னலில் வாழ்கின்ற கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக தற்போது வழங்கப்படும் பொற்கிழி தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் ஆக உயர்த்தி 10 கலைஞர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 2022-23ம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களான கே.கல்யாணசுந்தரம், ச.சமுத்திரம், என்.பார்வதி உதயம், கே.குமரவேல், பா.முத்துசந்திரன், கோ.முத்துலட்சுமி, பி.ஆர்.துரை, ரா.கல்யாணசுந்தரம், எம்.எஸ்.முகமது மஸ்தான், டி.என்.வரலட்சுமி ஆகியோருக்கு பொற்கிழி தொகையாக தலா ரூ.1 லட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று வழங்கினார்.

மேலும், 2022-23ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 500 கிராமிய கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கிட தலா ரூ.10 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ.50 லட்சம் நிதியுதவியாக வழங்கிடும் அடையாளமாக முதல்வர் 5 கிராமியக் கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார். 2020-21 மற்றும் 2021-22ம் ஆண்டுகளுக்கான தெரிவு செய்யப்பட்ட 1000 நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு 1.04.2023 முதல் மாதந்தோறும் ரூ.3,000 வீதம் நிதயுதவி வழங்கிடும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நலிவுற்ற மூத்த கலைஞர்களுக்கு மாதந்திர நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் மணிவாசன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான பொற்கிழி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: