பிக்னிக் போன்று கோயிலுக்கு செல்வதா?… சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்களை அனுமதிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: களக்காடு முண்டந்துறை காப்பு காட்டில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் செல்ல அனுமதி அளித்ததற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்திற்கும் காரையார் அணைக்கும் இடையே உள்ள அடர்ந்த முண்டந்துறை காப்புக்கட்டில் அமைந்திருப்பது சொரிமுத்து அய்யனார் கோயில். இங்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற விஷேச நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

வழிபாட்டின் போது பக்தர்கள் சுமார் 7 நாட்களுக்கு மேல் வனத்துக்குள் கூடாரங்கள் அமைத்து தங்கி உணவு சமைத்தும் அதிக சக்தி வாய்ந்த ஒளி விளக்குகளை பயன்படுத்தியும் குப்பைகளை விட்டு சென்றும் வனசூழலுக்கு ஊறுவிளைவிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கோரி நெல்லையை சேர்ந்த சாவித்ரி என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பாரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சுவாமி தரிசனம் செய்ய வருபவர்கள் ஏதோ பிகினிக் ஸ்பாட்க்கு வருவதை போல வருவதாக கருத்து தெரிவித்தனர். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த திருவிழாவிற்கு நீதிமன்றம் அனுமதித்த எண்ணிக்கையை விட அதிகளவு பக்தர்களை அரசு அனுமதித்ததாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் அடுத்த திருவிழாவிற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

The post பிக்னிக் போன்று கோயிலுக்கு செல்வதா?… சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்களை அனுமதிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: