லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் * அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதல் * 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி

திருவண்ணாமலை, செப்.29: திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்திருக்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். உமையாளுக்கு இடபாகம் அருளி அர்த்தநாரீஸ்வரராக அருட்காட்சியளித்த அண்ணாமலையார், அடி முடி காணாத ஜோதிப்பிழம்பாக எழுந்தருளிய அருள்நகரம் எனும் சிறப்பு மிக்கது. எனவே, திருவண்ணாமலையில் இறைவன் மலை(கிரி) வடிவில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். இங்குள்ள மலையை இறைவன் என்பதால் சிவவடிவான அண்ணாமலையை பக்தர்கள் வலம் வந்து வழிபடுகின்றனர்.

அதனால், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு கிரிவலம் செல்கின்றனர். எனவே, மாதந்தோறும் பவுர்ணமியன்று திருவண்ணாமலை நகரம் திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது. பக்தர்கள் வெள்ளத்தில் நிரம்புகிறது. இந்நிலையில், திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று மாலை 6.47 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். அதைத்தொடர்ந்து, நேற்று மாலை 6 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக அதிகரித்தது.
கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தூரமும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை திருக்கோயில், இடுக்குப் பிள்ளையார் கோயில்களை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இந்நிலையில், புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அதிகாலை ெதாடங்கி, இரவு 11 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதோடு, புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு, 2ம் பிரகாரத்தில் உள்ள நடராஜருக்கு, பால், சந்தனம், இளநீர், விபூதி ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அலங்கார ரூபத்தில் நடராஜர் அருள்பாலித்தார்.

மேலும், பவுர்ணமியை முன்னிட்டு முன்னுரிமை தரிசனம், கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மட்டும் ராஜ கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், தரிசன வரிசையில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் வசதிக்காக, வட ஒத்தைவாடை தெருவில் நிழற்பந்தல் வசதி செய்யப்பட்டிருந்தது. பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதைெயாட்டி, திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலைகளில் 9 தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட்டன. திருவண்ணாமலை நகருக்குள் சுற்றுலா கார், வேன் மற்றும் கனரக வாகனங்கள் அனுமதிக்கவில்லை. எனவே, நகரையொட்டி அமைந்துள்ள சாலையோரங்களிலும், புறவழிச்சாலைகளிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டன.
மேலும், வேலூர் கன்டோன்மென்ட் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள், வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து சென்னை பீச் ஸ்டேஷன் வரை நீட்டிக்கப்பட்டன. பவுர்ணமியை முன்னிட்டு எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் * அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதல் * 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி appeared first on Dinakaran.

Related Stories: