கர்நாடகா மாநிலத்தில் இன்று முழு அடைப்பு எதிரொலி பொதுமக்கள் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை திறப்பு; டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டுக்கு காவிரி நதி நீர் தர உத்தரவு பிறப்பித்ததின் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் பல்வேறு கன்னட அமைப்புகள் செப்டம்பர் 29ம் தேதி (இன்று) 24 மணி நேர முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால், கர்நாடக மாநில எல்லை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்பாக உள்ளுர் நிலைமைக்கேற்ப கர்நாடக அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பொதுமக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க தகுந்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சோதனைச்சாவடிகளிலும் உயர் அதிகாரிகளின் தலைமையில் கூடுதல் காவலர்களை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

இருமாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் இதர சந்தேகங்களை பொதுமக்கள் நிவர்த்தி செய்து கொள்ள தொடர்பு அலுவலகமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனிப்பிரிவு அலுவலகம் செயல்படும். பொதுமக்கள் தங்களது சந்தேகங்களை இந்த தொலை பேசி எண்கள் 9498170430, 9498215407 மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கர்நாடகா மாநிலத்தில் இன்று முழு அடைப்பு எதிரொலி பொதுமக்கள் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை திறப்பு; டிஜிபி சங்கர் ஜிவால் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: