சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே மத்திய சதுக்கத்தில் 27 மாடி கட்டிடம் கட்ட திட்டம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள ‘மத்திய சதுக்கம்’ பகுதியில் 27 மாடி கொண்ட பிரமாண்ட கட்டிடம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்று மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ரூ.400 கோடி செலவில் ‘மத்திய சதுக்கம்’ (சென்ட்ரல் ஸ்கொயர்) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சென்னை சென்ட்ரல், மெட்ரோ ரயில் நிலையம், ரிப்பன் வளாகம், ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, பூங்கா நகர் ரயில் நிலையம் ஆகியவற்றை இணைத்து ஒரே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சுரங்கப்பாதையை சென்னையின் அடையாளமாக மாற்றும் அளவிற்கு அழகிய செடிகள், நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமும் லட்சக்கணக்கான மக்கள் ‘மத்திய சதுக்கம்’ பகுதிக்கு வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் அடுத்தகட்டமாக 27 மாடி கட்டிடம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் முதலில் 33 அடுக்கு மாடி கட்டிடம் கட்ட திட்டமிட்டு இருந்தது. பின்னர் 31 மாடிகளுக்கு குறைக்கப்பட்டது. பின்னர், இரண்டு-கோபுரம் திட்டமிடப்பட்டது. அதில், ஒரு அமைப்பு 17 தளங்களையும் மற்றொன்று ஏழு தளங்களையும் கொண்டு கட்டிவிடலாம் என்று திட்டமிட்டனர். தற்போது இறுதியாக பல்வேறு தரப்பு உடன் ஆலோசனை மேற்கொண்டு தற்போதைய ஒரே தளத்தில் 27 மாடி கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக வடிவமைப்பும் இறுதிசெய்யப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி கூறியதாவது:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே 27 மாடி கொண்ட கட்டிடம் கட்ட முடிவு செய்து இருக்கிறோம். முதல் கட்டமாக, எட்டு அடுக்கு பிரமாண்டமான வாகன நிறுத்துமிடம் தயாராக உள்ளது. அதில், 1,500 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 400 நான்கு சக்கர வாகனங்கள் என 1,900 வாகனங்கள் நிறுத்தலாம். இரண்டு கோபுரங்களால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மேலும் மோசமடையலாம் என கருதி மாற்று திட்டங்களை யோசித்து இந்த திட்டத்தை கொண்டு வந்தோம். ஆரம்பத்தில், நாங்கள் நிறைய வணிக வளர்ச்சியை விரும்பினோம், ஆனால், போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக, அரசு அலுவலகங்களுக்கு கட்டிடத்தில் இடத்தை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

The post சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே மத்திய சதுக்கத்தில் 27 மாடி கட்டிடம் கட்ட திட்டம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: