பல்வேறு வழக்குகளில் சிக்கிய சூர்யாவிற்கு பாஜ பட்டியல் அணி மாநில செயலாளர் பதவி

தாம்பரம்: பல வழக்குகளில் சிக்கிய நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த ஆர்.கே.சூர்யா பாஜவில் இணைந்தார். அவருக்கு பாஜ பட்டியல் அணி மாநிலச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆர்.கே.சூர்யா. இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இவரது மனைவி விஜயலட்சுமி. நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ மகளிர் அணி தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் பாஜ பட்டியல் அணி மாநில செயலாளராக நெடுங்குன்றம் ஆர்.கே.சூர்யாவை, பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி நியமனம் செய்துள்ளார்.

பட்டியல் அணி மாநில செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நெடுங்குன்றம் ஆர்.கே.சூர்யா மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி சூர்யா ஆகியோர் நேற்று மரியாதையின் நிமித்தமாக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பட்டியல் அணி மாநிலச் செயலாளர் நெடுங்குன்றம் ஆர்.கே.சூர்யா கூறுகையில், ‘பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்ட பணிகள், தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலையின் கட்சிப் பணி, வளர்ச்சிப் பணிகள் குறித்த செயல்பாடுகள் பிடித்திருந்ததால் பாஜவில் இணைந்துள்ளேன்.

பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி எனக்கு மாநில அளவிலான பட்டியல் அணி செயலாளர் பதவி வழங்கியுள்ளார். அந்தப் பணியில் எந்த அளவிற்கு என்னால் வேலை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு வேலை செய்து பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கு உறுதுணையாகவும், ஒத்துழைப்பாகவும் இருந்து செயல்படுவேன். என் மீது சில வழக்குகள் உள்ளது. இன்றைய நிலவரப்படி வாரண்ட் உள்ள வழக்குகள் எதுவும் என்மீது இல்லை. அதேபோல புதிதாகவும் எந்த ஒரு வழக்குகளும் என் மீது பதியப்படவில்லை. நான் வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்களுக்கு சென்று கொண்டுதான் இருக்கிறேன். அதில் பாதி வழக்குகளில் இருந்து விடுதலையும் பெற்றுள்ளேன்.

நிலுவையில் உள்ள வழக்குகளை சட்டரீதியாக சந்தித்து என் மீது தவறு இல்லை என நிரூபித்து நான் விடுதலை பெறுவேன். மாநில தலைவர் அண்ணாமலை என்ன கூறுகிறாரோ அதை பொறுப்புடன் மேற்கொள்வேன். என் பெயரை பயன்படுத்தி யாராவது தவறு செய்தாலோ, கட்டப் பஞ்சாயத்து செய்தாலோ அதற்கு நான் பொறுப்பு கிடையாது. காவல்துறையிடமும் இனிமேல் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டேன் என தெளிவாக தெரிவித்துள்ளேன். என்னுடைய பெயர் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் 100 சதவீதம் செயல்படுவேன். சில ஆண்டுகளாக எந்த ஒரு குற்ற செயல்களிலும் ஈடுபடாமல் நீதிமன்றத்திற்கு சரியாக சென்று வழக்குகளில் ஆஜராகி அதிலிருந்து வெளியில் வரும் வேலையை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ முடித்துவிட்டு மக்களுக்கான முழு பணியில் ஈடுபடுவேன்’ என தெரிவித்தார்.

The post பல்வேறு வழக்குகளில் சிக்கிய சூர்யாவிற்கு பாஜ பட்டியல் அணி மாநில செயலாளர் பதவி appeared first on Dinakaran.

Related Stories: