வினாடிக்கு 3000 கனஅடி நீர் பரிந்துரை காவிரி ஆணையம் நாளை கூடுகிறது

புதுடெல்லி: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு மேலும் 18 நாள் வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 87வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா, செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய் ஆகியோர் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் தமிழ்நாட்டின் சார்பாக காவிரி தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியன் மற்றும் திருச்சி மண்டல தலைமை செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர். அதேப்போன்று கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநில அரசு அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 12500 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அதிகாரிகள் கோரிக்கை வைத்த நிலையில், கூட்டத்தின் முடிவில் இன்று முதல் அதாவது 28.09.2023 முதல் 15.10.2023 வரையில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு மேலும் 18 நாட்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி என்ற வீதம் தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது.

இதைத்தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது. அப்போது கூடுதல் நீரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாட்டு அதிகாரிகள் கோரிக்கையாக வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post வினாடிக்கு 3000 கனஅடி நீர் பரிந்துரை காவிரி ஆணையம் நாளை கூடுகிறது appeared first on Dinakaran.

Related Stories: