மாணவர்கள் மீது அக்கறை செலுத்துவதில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் இணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: மாணவர்கள் மீது அக்கறை செலுத்துவதில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் இணைந்து கூட்டாக செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். டிஎன்பிஎஸ்சி தேர்வில் பெற்றவர்களுக்கான வேலைக்கான நியமனங்கள் ஆணைகளை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து 373 இளநிலை அலுவலர்களுக்கான பணி நியமனங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

இதை நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்தது. அப்போது அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறையில் 373 இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது. இந்த பணியாணைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் வழங்குவதுதான் வழக்கம். இந்த முறை நானே நேரடியாக வழங்கினேன். முன்னதாக இரண்டு பேருக்கு முதல்வர் வழங்கினார். மீதம் உள்ளவர்களுக்கு இங்கு வழங்கப்படுகிறது.

மேலும், பணி நியமனம் பெறும் பணியாளர்கள், அரசின் அனைத்து திட்டங்களையும் எடுத்துச்சொல்லும் வகையிலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். கலை பண்பாட்டு நிகழ்வுகள் வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சிக்காக அல்ல. அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத்தான். வெளி உலகையும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தான் பல நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. அந்த காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் உறவு வேறு விதமாக இருந்தது. இப்போது மாணவர்கள் மனநிலை வேறு விதமாக இருக்கிறது. இது வேதனையாக இருக்கிறது. இதை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எமிஸ் பற்றி பல பிரச்னைகள் வருவதாக கூறப்படுகிறது. இனி எமிஸ் பயன்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆசிரியர்கள் கற்றல் பணியில் ஈடுபட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு பதிலாக பிஆர்டிஎஸ் நபர்களை பயன்படுத்துவோம். பள்ளிக் கல்வித்துறை சார்பாக வரும் புகார்கள் கூட உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆசிரியர்கள் மீது நாங்கள் அக்கறை காட்டுகிறோம். அதேபோல மாணவர்கள் மீது அக்கறை செலுத்துவதில் பெற்றோரும் ஆசிரியரும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

The post மாணவர்கள் மீது அக்கறை செலுத்துவதில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் இணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: