ரத்தம் சொட்ட சொட்ட பல கிலோமீட்டர் நடந்தார் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு உதவ மறுத்த கல்நெஞ்சக்காரர்கள்: ம.பியில் கொடூரம்

உஜ்ஜைன்: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி அரை நிர்வாண கோலத்தில் ரத்தம் சொட்ட சொட்ட உதவிகேட்டு பல கிலோ மீட்டர் நடந்து சென்றும் ஒருவர் கூட உதவ முன்வரவில்லை. மணிப்பூர் கலவரத்தின் போது 2 பழங்குடியின பெண்கள் ஒரு கும்பலால் இழுத்து செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த நிலையில், பாஜ ஆளும் ம.பி மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி உதவி கேட்டு வீடியோ சமூக வலைதளங்களில வெளியாகி மீண்டும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ம.பி மாநிலம் உஜ்ஜைன் நகரில் கடந்த கடந்த திங்களன்று இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. 12 வயது சிறுமி ஒருவரை உஜ்ஜைனில் சில மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் ஆடை கிழிந்து அரை நிர்வாண கோலத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு அந்த ஆசாமிகள் தப்பி ஓடிவிட்டனர். மயக்கம் தெளிந்த சிறுமி அரை நிர்வாண கோலத்தில் உடலில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட தட்டு தடுமாறி எழுந்து நடந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் உதவி கேட்ட அந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் விரட்டியடித்துள்ளனர். ரத்த கறை படிந்த உடையுடன் அவர் உதவி கேட்பதும் கல்நெஞ்சுகாரர்கள் உதவ மறுப்பதும்சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது.

யாரும் உதவ முன்வராததால் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து அங்குள்ள ஆசிரமம் ஒன்றுக்கு சென்ற சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர்கள் பலாத்காரம் நடந்திருப்பதை உறுதி செய்தனர். சம்பவத்தை அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்தனர். அப்பெண் பற்றி கேட்டபோது அவளால் எதுவும் பேச முடியவில்லை. அவளது மேல் சிகிச்சைக்காக இந்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு செவ்வாயன்று கொண்டு செல்லப்பட்டாள். அங்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதைதொடர்ந்து அந்த சிறுமியின் உடல்நிலை தேறிவருகிறது.

இது குறித்து உஜ்ஜைன் காவல் கண்காணிப்பாளர் சச்சின் சர்மா தெரிவித்தபோது, ‘அந்த சிறுமியிடம் அடையாள அட்டை எதுவும் இல்லை. அவள் தனது பெயரைக்கூட தெரிவிக்க முடியவில்லை. உ.பியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து மகாகால் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சி.சி.டி.வி பதிவுகளை ஆராய்ந்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்யப்படுவார்கள்’ என்றார்.

இந்த சம்பவம் பற்றி ம.பி உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்தபோது, ‘சிகிச்சைக்கு பிறகு அபாய கட்டத்தை அந்த சிறுமி கடந்து விட்டாள். இது சம்பந்தமாக ஒருவர் பிடிப்பட்டுள்ளார். தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்’ என்றார். சம்பவம் பற்றி ம.பி காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தனது டிவிட்டர் பதிவில், ‘பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும். 12 வயது மகள் கற்பழிக்கப்பட்டு, உஜ்ஜைன் தெருக்களில் அரைநிர்வாணமாக உதவி கேட்டு அலைந்தது மனித குலத்துக்கே பெரும் அவமானம். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

The post ரத்தம் சொட்ட சொட்ட பல கிலோமீட்டர் நடந்தார் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு உதவ மறுத்த கல்நெஞ்சக்காரர்கள்: ம.பியில் கொடூரம் appeared first on Dinakaran.

Related Stories: