ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சட்ட கமிஷன் அறிக்கை தயாரா?: ஆணைய தலைவர் விளக்கம்

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அறிக்கையை இறுதி செய்ய எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை என சட்ட கமிஷன் தலைவர் ரிது ராஜ் அவஸ்தி கூறி உள்ளார்.
மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த ஒன்றிய பாஜ அரசு திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு கடந்த 23ம் தேதி நடத்திய ஆலோசனையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் சட்ட கமிஷனின் கருத்தை அறிவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 22வது சட்டகமிஷன் அதன் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையில் நேற்று கூடியது. கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த கமிஷன் தலைவர் அவஸ்தி, ‘‘ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விவகாரம் தொடர்பான இன்னும் சில பணிகள் செய்ய வேண்டி உள்ளது. இதற்கான அறிக்கையை இறுதி செய்ய எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதே சமயம், போக்சோ சட்டத்தில் சிறார் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைப்பது தொடர்பான விவகாரம் மற்றும் ஆன்லைனில் எப்ஐஆர் பதிவு செய்யும் சட்டம் ஆகியவை தொடர்பான அறிக்கை இறுதி செய்யப்பட்டு சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விவகாரம் பல ஆண்டுகளாக சட்ட கமிஷனிடம் நிலுவையில் உள்ளது. போக்சோ சட்டத்தில் சிறார்களின் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் வயது குறைப்புக்கு சட்ட கமிஷன் ஆதரவு தெரிவித்துள்ளதா என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சட்ட கமிஷன் அறிக்கை தயாரா?: ஆணைய தலைவர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: