சந்திரபாபு நாயுடு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி தாமாக விலகல்

புதுடெல்லி: தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து தற்போது சந்திரபாபு நாயுடுக்கு இரண்டு நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திறன் மேம்பாட்டு வழக்கில் தன்மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதனை விசாரித்த நீதிமன்றம், ”திறன் மேம்பாட்டு தொடர்பான வழக்கில் சந்திரபாபு நாயுடு மீதான எப்ஐஆரை ரத்து செய்ய முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ‘‘திறன் மேம்பாடு தொடர்பான வழக்கில் தன்மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும்.அதேப்போன்று இந்த விவகாரத்தில் ஆந்திரா உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சந்திரபாபு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என் பாட்டி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி எஸ்.வி.என்.பாட்டி தாமாக முன்வந்து இந்த வழக்கு விசாரணையில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து சந்திரபாபு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை வரும் வாரம் உச்ச நீதிமன்ற புதிய அமர்வு விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்பாடுகிறது.

The post சந்திரபாபு நாயுடு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி தாமாக விலகல் appeared first on Dinakaran.

Related Stories: