களக்காடு தலையணையில் மூடப்பட்டுள்ள கேன்டீன், அருங்காட்சியகம் திறக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

களக்காடு: களக்காடு தலையணையில் மூடப்பட்டுள்ள கேன்டீன் மற்றும் அருங்காட்சியகத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை நீர்வீழ்ச்சி உள்ளது. வனத்துறையினரால் சுற்று சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவிய படி, அதிக குளிர்ச்சியுடன் ஓடி வருவதால் இதில் குளிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகளும் தலையணைக்கு வந்து மகிழ்ச்சியுடன் குளித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி கடந்த 2017ம் ஆண்டு அப்போதைய துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் ஏற்பாட்டின் பேரில் தலையணையில் வனத்துறை சார்பில் கேன்டீன் திறக்கப்பட்டது. இங்கு ஐஸ் கிரீம், டீ, காபி, குளிபானங்கள் மற்றும் சினாக்ஸ் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது, சுற்றுலா பயணிகளும் குளித்து விட்டு, சினாக்ஸ் பொருட்களை வாங்கி பயனடைந்து வந்தனர். கேன்டீனில் விற்பனையும் அதிகரித்து வந்தது. அதுபோல அதே கட்டிடத்தில் மற்றொரு பகுதியில் அருங்காட்சியகமும் செயல்பட்டு வந்தது.

இதில் வனவிலங்குகளின் மாதிரிகள், அவைகளின் சத்தம் எழுப்பும் கருவிகள், பல்வேறு வகையான மீன்கள் உள்ளிட்டவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனையும் சுற்றுலா பயணிகள் பார்த்து இன்புற்றனர். இதனிடையே கொரோனா பரவல் தடை உத்தரவால் கடந்த 2018ம் ஆண்டு கேன்டீனும், அருங்காட்சியகமும் மூடப்பட்டது. அதன்பின் 4 ஆண்டுகளாக இதுவரை கேன்டீன், அருங்காட்சியகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிப்படைவதுடன், கட்டிடமும் பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. எனவே மூடப்பட்டுள்ள கேன்டீன் மற்றும் அருங்காட்சியகத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி முன்னாள் கிராம வனக்குழு தலைவர் நடராஜன் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரனிடம் மனு கொடுத்துள்ளார்.

The post களக்காடு தலையணையில் மூடப்பட்டுள்ள கேன்டீன், அருங்காட்சியகம் திறக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: