சித்தூரில் சந்திரபாபு கைது கண்டித்து கண்களுக்கு கருப்பு துணி கட்டி போராட்டம்

சித்தூர் : சித்தூரில் சந்திரபாபு கைது கண்டித்து கண்களுக்கு கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டம் நடைபெற்றது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் செய்ததாக சிஐடி போலீசார் கைது செய்து ராஜமந்திரி சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்து மாநில முழுவதும் தெலுங்கு தேச கட்சியினர் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேச கட்சி சார்பில் 15 நாட்களாக அக்கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று தெலுங்கு நாடு மாணவர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பிரபு தேஜா தலைமையில் நூதன முறையில் கைகளுக்கு சங்கிலிஅணிந்து, கண்களுக்கு கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தெலுங்கு நாடு மாணவர்கள் சங்க மாவட்ட தலைவர் பிரபு தேவா பேசியதாவது: ஆந்திர மாநில சந்திரபாபு 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தார். அவருடைய ஆட்சியில் வேலையில்லா இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் நடந்ததாக தற்போது உள்ள முதல்வர் ஜெகன்மோகன் வேண்டுமென்றே அவர் மீது தவறான வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது ஊழலா? என தெலுங்கு நாடு மாணவர்கள் சங்கம் சார்பில் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். சந்திரபாபுவின் 45 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் 14 வருடங்கள் முதலமைச்சராக பதவி வகித்தார். அவருடைய ஆட்சியில் மாநிலத்தில் பல்வேறு நல திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. ஒரு ரூபாய் கூட ஊழல் நடைபெறவில்லை. ஆனால் தற்போதுள்ள அராஜக ஆட்சியில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் ஒன்று கூட ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வரவில்லை. படித்து வேலை இல்லா இளைஞர்கள் வேலை இல்லாமல் வெளி மாநிலங்களுக்கு சென்று கூலி வேலை செய்யும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

வரும் தேர்தலில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு வெற்றி பெற்று மீண்டும் அமைச்சர் ஆகி விடுவார் என கருதி அவர் மீது வேண்டுமென்றே பொய்யான புகார்கள் மீது வழக்கு பதிவு செய்து ராஜமந்திரி சிறையில் அடைத்துள்ளார்கள. ஆகவே முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் இல்லை என்றால் தெலுங்கு நாடு மாணவர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார். இதில் தெலுங்கு நாடு மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கண்களுக்கு கருப்பு துணி கட்டிக் கொண்டும், கைகளுக்கு சங்கிலி அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post சித்தூரில் சந்திரபாபு கைது கண்டித்து கண்களுக்கு கருப்பு துணி கட்டி போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: