மாதம்தோறும் கிராமங்களில் மக்கள் தொடர்பு முகாம்

நாமக்கல் செப்.27:பொதுமக்களின் குறைகளை தீர்க்க மாதம்தோறும் கிராமங்களில் மக்கள் தொடர்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்பபப்ட்டுள்ளது. இதற்காக 8 தாலுகாவில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பதில் அனுப்பி வருகிறார்கள்.

மக்கள் குறைதீர் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாதத்தில் முதல் வாரம் நடைபெறும் கூட்டத்தில் கலெக்டர், துறை அதிகாரிகளை நேரில் அழைத்து ஆய்வு செய்து வருகிறார்.மேலும் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் புதன்கிழமை தாலுகா அளவில் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு அங்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் தலைமையில் அனைத்துதுறை அதிகாரிகளும் பங்கேற்கும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெறப்படும் மனுக்கள் மீதும் துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை போக்க மாதம்தோறும் 4வது புதன்கிழமையில் தாலுகா அளவில் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மண்டல அலுவலர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை தாலுகா அளவில் ஒரு கிராமத்தை தேர்வு செய்து தொடர்புடைய மண்டல அலுவலர்களின் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது. மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படவுள்ள நாள் அரசு விடுமுறை நாளாக இருந்தால், அதற்கு அடுத்த வேலை நாளில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படும். முகாம் பொறுப்பு அலுவலர் அந்தந்த தாலுகாவில் தாசில்தார் ஆவார்.

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் தொடர்புடைய வட்ட அளவிலான அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொள்ளவேண்டும். மேலும் தொடர்புடைய அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.

 

அக்டோபர் மாதம் 4வது புதன்கிழமையான 25ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் விபரம்:
நாமக்கல் தாலுகாவில் எர்ணாபுரத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், திருச்செங்கோடு தாலுகா மோளிப்பள்ளியில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது. சேந்தமங்கலம் தாலுகாவில் காவக்காரன்பட்டியில் சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர், மோகனூர் தாலுகா அரசநத்தத்தில், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் தலைமையிலும், ராசிபுரம் தாலுகா மின்னக்கல்லில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், கொல்லிமலை தாலுகா தேவனூர்நாட்டில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் தலைமையிலும், பரமத்தி-வேலூர் தாலுகா மேல்சாத்தம்பூரில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், குமாரபாளையம் தாலுகா ஆனங்கூரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையிலும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த இடங்களில் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறவேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post மாதம்தோறும் கிராமங்களில் மக்கள் தொடர்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: