இதேபோல், அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், ‘‘நவம்பரில்தான் தீபாவளி என்று நினைத்தோம். பாஜவை வெளியேற்றி செப்டம்பரிலேயே தீபாவளியை கொண்டாட வைத்த பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு நன்றி.. நன்றி…’’ என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. மதுரையில், ‘கிங் மேக்கர் – புரட்சி தமிழர்’ என எடப்பாடி பழனிசாமி படத்துடன் அதிமுகவினரால் ஒட்டப்பட்ட போஸ்டர்களின் அருகிலேயே, பாஜவினர் புலிகேசி என்று அச்சிட்ட போஸ்டர்களை தேடித்தேடி ஒட்டியுள்ளனர்.
தூத்துக்குடி: முன்னாள் அமைச்சர் காளிமுத்து கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது என்று அடிக்கடி கூறுவது வழக்கம். அதே சொற்றொடரை பயன்படுத்தி பாஜ கூட்டணி முறிவை, ‘கருவாடு மீன் ஆகாது, பிஜேபி தமிழகத்துக்கு ஆகாது…’’ என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகிகள் தூத்துக்குடியில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இவர்கள் தான் கடந்த வாரம், ‘‘கூட்டணியாவது கூந்தலாவது’ நன்றி மீண்டும் வராதீர்கள்.’’ என்று போஸ்டர் ஒட்டியிருந்தனர். பாஜ சார்பிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
நோட்டாவின் போட்டியாளருக்கு டாட்டா
பாஜவுடன் கூட்டணி முறிந்ததையடுத்து ‘‘நோட்டாவின் போட்டியாளர்களுக்கு டாட்டா காட்டிய கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் எடப்பாடியார்.’’ என்று தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர் மற்றும் கூட்டணி முறிவு தொடர்பாக மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘எங்களுக்கு தீபாவளி… எடப்பாடிக்கு வயித்து வலி’
அதிமுக – பாஜ கூட்டணி முறிவை தொடர்ந்து மதுரையில் பாஜவினர் பட்டாசு கொளுத்தி கொண்டாடினர். அப்போது, கைகளில் கம்பி மத்தாப்புகளை கொளுத்தியபடி, ‘எங்களுக்கு தீபாவளி.. எடப்பாடிக்கு வயித்து வலி’ என்று கோஷங்களை எழுப்பினர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The post கூட்டணி முறிந்த நிலையில் போஸ்டர் யுத்தம் புலிக்கு புலிகேசி ஆதரவு எதற்கு? – பாஜ பிஜேபி தமிழகத்துக்கு ஆகாது – அதிமுக appeared first on Dinakaran.