ஒன்றிய இணை அமைச்சர், பாஜ எம்எல்ஏவிடம் சரமாரி கேள்வி இந்தியா கூட்டணியை விமர்சிக்கிறீங்க… உங்க கூட்டணி குறித்து பேச தயக்கமா?.. பதிலளிக்க முடியாமல் பாதியில் ஓட்டம்

கோவை: அதிமுக-பாஜ கூட்டணி குறித்து கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஒன்றிய இணை அமைச்சர், பாஜ எம்எல்ஏ ஆகியோர் பாதியில் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, அஞ்சல் துறை மத்திய கலத்துறை வங்கி மற்றும் இந்திய உணவுக் கழகம் போன்ற துறைகளில் 156 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு எல்.முருகன் பேட்டியளித்தார்.

அப்போது, ‘‘அதிமுக, பாஜ கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும்’’ என கூறியது தொடர்பாக நிருபர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த எல்.முருகன், ‘‘இங்கு ஆபீசர்கள் எல்லாம் இருக்காங்க. இது அரசியல் சம்பந்தமான சந்திப்பு இல்ல. வேலைவாய்ப்பு தொடர்பானது’’ என கூறினார். உடன் இருந்த வானதி சீனிவாசன் எம்எல்ஏவும், ‘‘அரசு சம்பந்தமாக, வேலைவாய்ப்பு சம்பந்தமாக கேள்வி இருந்தால் அமைச்சரிடம் கேளுங்க’’ என்றார்.

அப்போது நிருபர் ஒருவர், ‘‘இந்தியா கூட்டணி குறித்து பொது வெளியில் விமர்சிக்க உங்களால் முடிகிறது. ஆனால், உங்கள் கூட்டணி தொடர்பான பிரச்னை குறித்து கேள்வி கேட்டால் ஏன் தயங்குகிறீர்கள்?’’ என கேள்வி எழுப்பினார். அப்போது எல்.முருகன், ‘‘நேற்றே எங்கள் மாநில தலைவர் மிக தெளிவாக சொல்லி இருக்கிறார். இது சம்பந்தமாக எங்களது ஆல் இந்தியா தலைமை அவர்களது கருத்துகளை, விளக்கங்களை சொல்வார்கள்’’ என கூறினார்.

தொடர்ந்து நிருபர் மீண்டும் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு பதில் அளிக்க முடியாமல் இருக்கையை விட்டு எழுந்து, ‘‘நான்தான் ெசால்லிவிட்டேனே. நன்றி, வணக்கம்’’ என கூறிவிட்டு அங்கிருந்து செல்ல துவங்கினார். ஆனால் நிருபர், ‘‘உங்களுக்கு சுதந்திரம் இல்லையா?’’ என்றார். அப்போது, வானதி சீனிவாசன், ‘‘எங்கள் பிரச்னையை எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுவோம்’’ என பதில் அளித்தார். மீண்டும் அந்த நிருபர், ‘‘அடுத்தவர்கள் பிரச்னையை மட்டும் பொது வெளியில் பேசறீங்க. உங்க பிரச்னையை பேச மாட்டேங்கிறீங்க?’’ என கேட்டார். ஆனால் அமைச்சரும், வானதி சீனிவாசனும் பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்றனர்.

The post ஒன்றிய இணை அமைச்சர், பாஜ எம்எல்ஏவிடம் சரமாரி கேள்வி இந்தியா கூட்டணியை விமர்சிக்கிறீங்க… உங்க கூட்டணி குறித்து பேச தயக்கமா?.. பதிலளிக்க முடியாமல் பாதியில் ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: