திருவண்ணாமலை, செப்.27: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. படிப்படியாக நகரின் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிட்டுள்ளனர். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் நவம்பர் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக நவம்பர் 26ம் தேதி மகா தீபம் ஏற்றப்படும். அதையொட்டி, தீபத்திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்காக கடந்த 21ம் தேதி பந்தக்கால் நடப்பட்டது. அதைத்தொடர்ந்து, சுவாமி வீதியுலா வாகனங்கள் சீரமைப்பு, திருத்தேர் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், தீபத்திருவிழாவின் 7ம் நாள் விழாவின்போது தேரோடும் மாட வீதியை, திருப்பதிக்கு இணையாக கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக, பே கோபுரம் வீதி மற்றும் பெரிய தெரு ஆகிய பகுதிகள் கான்கிரீட் சாலையாக மாற்றப்படுகிறது. முதற்கட்ட கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள், அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்நது, தேரடி வீதி மற்றும் திருமஞ்சன வீதி ஆகியவற்ைற கான்கிரீட் சாைலயாக தரம் உயர்த்தும் பணி தீபத்திருவிழாவுக்கு பிறகு நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாட வீதியில் தீபத்திருவிழாவை முன்னிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேரடி வீதியில் நேற்று நடைபாதையை ஆக்கிரமித்திருந்த கடைகள் மற்றும் கட்டிடங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். மேலும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இப்பணியை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒருங்கிணைத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, கடலைக் கடை சந்திப்பு தொடங்கி, பே கோபுர வீதி சந்திப்பு வரை மற்றும் சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. மேலும், கிரிவலப்பாதையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் தொடராமல் கண்காணிக்க, வாரத்துக்கு இரண்டு நாட்கள் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டிருக்கிறார். எனவே, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
The post திருவண்ணாமலை மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம் ஜேசிபி உதவியுடன் அதிகாரிகள் நடவடிக்கை வரும் 17ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கம் appeared first on Dinakaran.