தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்

கீழ்பென்னாத்தூர், செப். 27: மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. மேலும் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஜூன் மற்றும் ஜூலை 2023 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுதிய முதலாமாண்டு, இரண்டாமாண்டு ஆசிரியர் கல்வி பயிற்சி மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அவரவர் பயின்ற ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும், தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் இன்று பிற்பகல் 3மணி முதல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் மாணவ, மாணவியர்கள் தங்களது விடைத்தாட்களை மறுகூட்டல் செய்யவும், ஒளி நகல் பெறவும் விண்ணப்பிக்க விரும்பினால் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொண்டு அதனை பூர்த்தி செய்து அவ்விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையை செலுத்தி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் 03.10.2023 அன்று காலை 11.00 மணி முதல் 05.10.2023 அன்று மாலை 5.00மணி வரை, தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விடைத்தாட்களின் ஒளிநகல் வேண்டி விண்ணப்பித்த தேர்வர்கள் மட்டுமே பின்னர் மறுகூட்டல்-II, மறுமதிப்பீடு விண்ணப்பிக்க இயலும். தற்போது விடைத்தாட்களை மறுகூட்டல்-I கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பின்னர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலாது. கட்டணம் மற்றும் கட்டணம் செலுத்தும் வழிமுறைகள்: விடைத்தாள் ஒளி நகல் வேண்டி விண்ணப்பிப்பவர்கள் ₹275 ஒரு பாடத்திற்கு செலுத்த வேண்டும். விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ₹205 ஒரு பாடத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இடம் தேர்வர்கள் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

The post தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் appeared first on Dinakaran.

Related Stories: