போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1 கோடி நிலத்தை அபகரித்தவர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

ஆவடி: போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நிலத்தை அபகரித்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட முகப்பேர் கிழக்கு 2வது தெருவைச் சேர்ந்தவர் விஷ்ணுகுமார் (எ) விஷ்ணுரூபன். இவர் தனது ரூ.1 கோடி மதிப்பிலான 66 சென்ட் நிலத்தை ஏமாற்றி ஆக்கிரமித்து விட்டதாக கடந்த 20ம் தேதி ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, நல்லூர் கிராமத்தில் 66 செண்ட் நிலத்தை ஞானபிரகாசம் என்பவரின் மனைவி பாக்கியம் என்பவரிடமிருத்து 2003ம் ஆண்டு ரெட்ஹில்ஸ் சார் – பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் பெற்று நான் அனுபவித்து வந்தேன்.

இந்த நிலத்தைச் சுற்றிலும் வேலி அமைத்து சிறிய வீட்டினை அமைத்து, விவசாயம் செய்து பராமரித்து வந்தேன். மேற்படி நிலத்திற்கு சம்மந்தமில்லாத, கிழக்கு தாம்பரம் வேங்கைவாயல் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜாகீர்உசேன் (48) என்பவர், எனக்குச் சொந்தமான இந்த இடத்துக்கு கிரையம் பெற்றதாக கூறி, ஒரு போலியான ஆவணத்தை காட்டி 21.10.2020ம் ஆண்டு அடியாட்களை வைத்து இடத்தை காலி செய்யுமாறு மிரட்டினார். இது சம்பந்தமாக சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. நிலம் என்னுடையது என்பதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ள நிலையில், அதன்பின்னர் 22.6.21ல் மீண்டும் அத்துமீறி என் நிலத்தில் நுழைந்து பொக்லைன் இயந்திரத்தை கொண்டு பயிற்களை அழித்தும், என்னை தாக்கியும் ஜாகீர் உசேன் மிரட்டிவிட்டுச் சென்றார்.

எனவே, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து என் நிலத்தை எனக்கு மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். இதுகுறித்து, ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர், துணை ஆணையர் பி.பெருமாள் தலைமையில் தனிப்படை அமைத்து உதவி ஆணையர் பொன் சங்கர், ஆய்வாளர் வள்ளி உள்ளிட்ட போலீசார் ஜாகீர்உசேனை பிடித்து விசாரணை நடத்தினர். நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன், அவர் போலி ஆவணங்கள் தயாரித்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டார். பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1 கோடி நிலத்தை அபகரித்தவர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: