ஜன.22ம் தேதி அயோத்தி ராமர்கோயில் கும்பாபிஷேகம்?

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறலாம் என எதிர்பார்ப்பதாக கோயில் கட்டுமான பணிகள் குழு தலைவர் நிரிபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. கோயில் கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதியில் முடிவடையவுள்ளது.

இது குறித்து ராமர் கோயில் கட்டுமான பணிகள் குழு தலைவர் நிரிபேந்திரா மிஸ்ரா கூறுகையில், ‘‘மூன்று தளங்களை கொண்ட ராமர் கோயிலின் கீழ்தளம் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடையும் இதனை தொடர்ந்து ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். ஜனவரி 20ம் தேதி முதல் 24ம் தேதிகளில் எந்த நாளிலும் பிரதமர் மோடி கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் இறுதி தேதி பிரதமர் அலுவலகத்தால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் மோடியை அறக்கட்டளை முறைப்படி அழைக்கும். ஜனவரி 14ம் தேதி மகர சங்கராந்திக்கு பிறகு ராமர் சிலை( ராமர் லல்லா) பிரதிஷ்டை செயல்முறையை தொடங்கவும், 10 நாட்கள் கும்பாபிஷேக சடங்குகளை கடைப்பிடிக்கவும் கோயில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது” என்றார். ஒவ்வொரு ஆண்டும் ராம நவமியில் கோயில் கருவறைக்குள் இருக்கும் சுவாமி சிலையில் சூரிய ஒளிக்கதிர்படும்படியாக கோயில் கோபுரத்தில் நிறுவப்பட உள்ள கருவியை வடிவமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை விஞ்ஞானிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

The post ஜன.22ம் தேதி அயோத்தி ராமர்கோயில் கும்பாபிஷேகம்? appeared first on Dinakaran.

Related Stories: