கொலிஜியத்தின் 70 பரிந்துரைகள் நிலுவை ஒன்றிய அரசின் தாமதத்தால் நல்ல நீதிபதிகளை நாடு இழக்கிறது: உச்ச நீதிமன்றம் வேதனை

புதுடெல்லி: கொலிஜியத்தின் 70 பரிந்துரைகள் நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு காட்டும் தாமதத்தால் திறமையானவர்கள் நீதிபதியாகும் வாய்ப்பை இழப்பதாக வேதனை தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பு தேர்ந்தெடுத்து அரசுக்கு பரிந்துரைத்து வருகிறது. இந்த நடைமுறையில் ஒன்றிய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே சமீபகாலமாக கருத்து மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை பின்பற்ற ஒன்றிய அரசு மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதன்ஷு ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன், ‘‘கொலிஜியத்தால் ஒரே நேரத்தில் சிலரது பெயர்கள் பரிந்துரைக்கப்படும் சமயத்தில் ஒன்றிய அரசு அதை பிரித்து, குறிப்பிட்ட சிலரை மட்டும் நீதிபதிகளாக நியமிப்பது கவலைக்குரியது. இது வழக்கறிஞர்களின் மன உறுதியை பாதிக்கிறது. இதனால் பலர் தங்கள் பெயர் பரிந்துரையை திரும்பப் பெறுகின்றனர்’’ என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘நாங்கள் திறமைசாலிகளை நீதிபதியாக்க வேண்டுமென விரும்புகிறோம். ஆனால் இதில் தாமதம் காரணமாக திறமையான நபர்கள் விரக்தியடைந்து தங்கள் பெயர்களை திரும்பப் பெறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் திறமையான நீதிபதிகளை நாடு இழக்க வேண்டியிருக்கிறது. நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலிஜியத்தின் 70 பரிந்துரைகள் நிலுவையில் உள்ளன. 9 பரிந்துரைகளை அரசு திரும்பப் பெறவோ முடிவு தெரிவிக்கவோ இல்லை. இதில் 26 பரிந்துரைகள் பணிஇடமாற்றம் தொடர்பானது. அதில் கூட ஒன்றிய அரசு முடிவெடுக்காமல் உள்ளது.

இந்த அனைத்து பரிந்துரைகளும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து நிலுவையில் உள்ளன. பல பரிந்துரைகளில் கடந்த 7 மாதமாக வெறுமனே ஆரம்ப கட்ட பணிகளை மட்டுமே ஒன்றிய அரசு செய்துள்ளது. எனவே இந்த விஷயத்தை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. இனி 10 அல்லது 12 நாட்களுக்கு ஒருமுறை இந்த விஷயத்தை பற்றி விசாரிப்போம். ஒன்றிய அரசு தொடர்ந்து நிலுவை விஷயங்களின் நிலை குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும்’’ எனக் கூறி விசாரணையை அடுத்த மாதம் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post கொலிஜியத்தின் 70 பரிந்துரைகள் நிலுவை ஒன்றிய அரசின் தாமதத்தால் நல்ல நீதிபதிகளை நாடு இழக்கிறது: உச்ச நீதிமன்றம் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: