கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு கனகநாச்சியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

*புல்லூர் தடுப்பணையில் தடுப்பு வேலி அமைப்பு

வாணியம்பாடி : தமிழக- ஆந்திர வனப்பகுதிகளில் பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் புல்லூர் தடுப்பணையை கடந்து கனநாச்சியம்மன் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.தமிழக- ஆந்திரா வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக- ஆந்திரா எல்லைப் பகுதியான புல்லூரில் கனகநாச்சியம்மன் கோயில் அருகே ஆந்திரா மாநில அரசு கட்டியுள்ள தடுப்பணை முழுவதும் நீர் நிரம்பி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி வழியாக வாணியம்பாடி பாலாற்றில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. கனமழையால் பாலாற்றில் நீர் வர தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் புல்லூர் தடுப்பணையை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுவதால், பாதுகாப்பு கருதி தடுப்பணை வழியாக கனகநாச்சியம்மன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் தடுப்பணை வழியாக பக்தர்கள் செல்லாதபடி நேற்று தடுப்பணையின் எல்லைகளில் இரும்பு கம்பியால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. இந்த தடுப்பணையில் குளிக்க முயன்று கடந்த 3 மாதங்களில் 15க்கும் மேற்பட்டோர் மூழ்கி இறந்த நிலையில், இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க தடுப்பணை பகுதியில் தடை விதித்து வேலி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலாற்றில் குளிக்க வேண்டாம்

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து கனமழை பெய்தால் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் பாலாற்றில் குளிப்பது, சிறுவர்களை விளையாட அனுமதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதேபோல் மழைக்காலத்தில் நீர் நிலைகளில் சிறுவர்களை விளையாட அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு கனகநாச்சியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை appeared first on Dinakaran.

Related Stories: