கோயில்களின் சேவையை பக்தர்கள் அறிவதற்கு ‘திருக்கோயில்’ செயலி

சேலம், செப்.26:சேலம் மாவட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோயில்களின் ேசவையை பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் திருக்கோயில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக சேலம் சுகவனேஸ்வரர், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில்களில் இந்த செயலி, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் அதன் ஆண்டு வருமானத்தை வைத்து தரம் பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது கோயில்களில் எண்ணற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருவாய் அதிகமுள்ள கோயில்களில் தினசரி 50 முதல் 75 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேலும் ஏழை, எளிய மக்கள் கோயில்களில் குறைந்த செலவில் திருமணம் செய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின், இதுவரை பல ஆண்டாக கும்பாபிஷேகம் நடக்காத கோயில்களை கண்டறிந்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் புனரமைப்பு பணிகள் நடந்துள்ளது.

அந்த வகையில், திருகோயில்களில் பூஜை நேரம், கோயில் நடை திறக்கும் நேரம், உற்சவர் பூஜை நிலவரம், திருவிழாக்கள் உள்ளிட்டவைகளை பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அறநிலையத்துறை சார்பில் ‘திருக்கோயில் செயலி’ பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆன்ட்ராய்டு செல்போனில் பதிவிறக்கம் செய்தால் கோயில்களில் நடக்கும் அனைத்து திருவிழாக்கள் மற்றும் பல்வேறு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை எளிதில் அறிந்து பயன்படுத்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘திருக்கோயில்’ என்ற கைப்பேசி செயலியையும், 48 முதுநிலை திருக்கோயில்களின் பிரசாதங்களையும் பக்தர்களின் இல்லங்களுக்கு மத்திய அரசின் அஞ்சல் துறையுடன் இணைந்து அனுப்பி வைக்கும் திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

‘திருக்கோயில்’ செயலி மூலம் கோயில்களின் தலபுராணம், தலவரலாறு, நடை திறந்திருக்கும் நேரம், பூஜைகள், பிரார்த்தனைகள், அதற்கான கட்டண விவரங்கள், முக்கிய திருவிழாக்கள், அனைத்து கோணங்களிலும் திருக்கோயில்களை கண்டுகளிக்கும் மெய்நிகர் காணொளி, திருவிழாக்களின் நேரலை, திருக்கோயில்களை சென்றடைவதற்கான கூகுல் வழிகாட்டி, பக்தர்களுக்கான சேவைகள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.அதேபோல, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் திருக்கோயில்களுக்கு செல்லும்போது மின்கல ஊர்தி, மற்றும் சாய்தளத்தில் சக்கர நாற்காலியில் அழைத்து செல்வதற்கும் தரப்பட்டுள்ள தொலைபேசி எண் சேவையையும் பெறலாம்.

இது தவிர செயலியின் மூலம் அன்னதானம், திருப்பணி போன்ற நன்கொடைகளையும் வழங்கலாம். மேலும், தேவாரம், திருவாசகம், திருமுறைகள், நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவை முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில் முதல் கட்டமாக, பிரசித்தி பெற்ற 50 முதுநிலை திருக்கோயில்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சேலம் மாவட்டத்தில் சேலம் சுகவனேஸ்வரர் கோயில், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் திருக்கோயில் செயலி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கோயில்களில் நடக்கும் பூஜை நிலவரம் உள்பட பல்வேறு விபரங்களை தெரிந்து கொள்ள ஆன்ட்ராய்டு செல்போனில் பிளே ஸ்டோர் மூலமாகவும், ஐஎஸ்ஓ வகை செல்போன் ஆப் ஸ்டோர் மூலமாகவும் பதவிறக்கம் செய்து பக்தர்கள் பயன்பெறலாம்.

அடுத்தகட்டமாக 88 திருக்கோயில்களை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோயில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயில், சேலம் கோட்டை பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்கள் இடம் பெற வாய்ப்புள்ளது. படிப்படியாக மற்ற திருக்கோயில்களின் விவரங்களும் இணைக்கப்படும். இதேபான்று பக்தர்களின் விருப்பப்படி 48 முதுநிலை திருக்கோயில்களின் பிரசாதங்களை அவர்களின் இல்லங்களுக்கே அஞ்சல் துறையின் மூலம் அனுப்பி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ளவர்கள் திருக்கோயில் பிரசாதங்களை பெறுவதற்கு பிரசாதத்துக்கு உரிய கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை மட்டுமே வசூலிக்கப்படும். எந்தெந்த திருக்கோயிலுக்கு எந்தெந்த பிரசாதங்கள் சிறப்போ அவை அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post கோயில்களின் சேவையை பக்தர்கள் அறிவதற்கு ‘திருக்கோயில்’ செயலி appeared first on Dinakaran.

Related Stories: