அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ₹2.67 கோடியில் வகுப்பறைகள்

பள்ளிபாளையம், செப்.26: பள்ளிபாளையம் நகராட்சியில், அரசு தொடக்கப்பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டவும், கழிப்பறைகள், சுற்றுச்சுவர், நடைபாதை அமைக்கவும் ₹2.67 கோடியில் திட்ட வரைவுகள் தயார் செய்யப்பட்டு, அரசின் நிர்வாக அனுமதிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

பள்ளிபாளையம் நகராட்சியில் ஆவாரங்காடு, கண்டிபுதூர், நாட்டாக்கவுண்டம்புதூர் ஆகிய மூன்று இடங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1,200 குழந்தைகள் படித்து வருகின்றனர். ஒன்றியத்தின் கீழ் இயங்கி வந்த இந்த பள்ளிகள், நடப்பு கல்வியாண்டில் இருந்து நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகரித்து வரும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து நகர்மன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன், கமிஷனர் தாமரை, பொறியாளர் ரேணுகா ஆகியோர், பள்ளிகளை நேரில் பார்வையிட்டு தேவைகளை கேட்டறிந்தனர்.

குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கண்டிப்புதூர் தொடக்கப்பள்ளிக்கு 6 வகுப்பறைகள், நாட்டாக்கவுண்டம் புதூர், ஆவாரங்காடு பள்ளிகளுக்கு தலா 2 வகுப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கண்டிப்புதூர் பள்ளியில் 4 இருக்கைகள் கொண்ட கழிப்பறை அமைக்கவும், தவிர சுற்றுச்சுவர் எழுப்புதல், நடைபாதைகளில் பேவர் பிளாக் அமைத்தல், வகுப்பறைகளில் டைல்ஸ் பதித்தல் போன்ற பணிகளை செய்ய ₹2.67 கோடி மதிப்பில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு, அரசின் நிர்வாக அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ₹2.67 கோடியில் வகுப்பறைகள் appeared first on Dinakaran.

Related Stories: