காஞ்சிபுரம் அருகே நட்சத்திர விருட்ச விநாயகருக்கு முந்நீர் அபிஷேகம்: பக்தர்கள் வழிபாடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் முந்நீர் அபிஷேகம் விழா நடைபெற்றது. முந்நீர் என்னும் சொல்லுக்கு ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் ஆகிய மூன்றையும் குறிக்கும் பொருள் உண்டு. எனினும், கடல் என்னும் பொருளிலேயே முன்னோர்களால் இச்சொல்லாட்சி கையாளப்பட்டு வந்துள்ளது. இவ்வகையில் ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்ற மூன்று நீர்களை உடையது கடல். மூன்று வகை நீரால் கலந்து செய்யப்படும் ஓர் கலவை முந்நீர்.

முந்நீர் விழா என்பது சங்ககாலத்தில் நடைபெற்ற விழாக்களில் ஒன்றாக விளங்கியிருந்துள்ளது. பூமியை ஆக்கல், அளித்தல், அழித்தல் என்ற மூன்று தன்மைகளையுடையது. கடலில் பொழிந்து கடல் வளத்தைப் பெருக்கும் மழைநீர், ஆறு அடித்துக்கொண்டு வரும் மழைநீர், மண்ணிலிருந்து ஊறிவரும் ஊற்றுநீர் ஆகிய மூன்று நீரும் கலந்தது. இதனை, ‘இரும் பனையின் குரும்பை நீரும், பூங் கரும்பின் தீம் சாறும், ஓங்கு மணல் குவவுத் தாழைத் தீம் நீரொடு உடன் விராஅய், முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்’ என்று புறநானூறு கூறுகிறது.

மூன்று வகையான பருகும் நீரை ஒன்றாகக் கலந்து, உண்ணும் பழக்கம் சங்ககால தமிழக மக்களிடையே இருந்து வந்தது. இந்த கலவை நீரை முந்நீர் என்றனர். அந்த வகையில், மறைந்துபோன, சங்ககால மக்கள் நடத்திய விழாவினை, மீண்டும் கொண்டு வந்து தமிழர்களின் பண்பாடுகளை நினைவூட்டும் வகையில் மழை நீர், ஆற்று நீர், ஊற்று நீர் ஆகியவற்றை மூன்று கலசத்தில் சேகரித்து, காஞ்சிபுரம் – வந்தவாசியில் நெடுஞ்சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்திற்கு தெற்கே கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ள நட்சத்திர விருச்ச விநாயகர் கோயிலில் விருட்ச விநாயகருக்கும் மற்றும் முந்நீர் கடவுளாக விளங்கும் விஷ்ணு பகவானுக்கு முந்நீர் கலசபிஷேகம், மகா தீப ஆராதனைகள் நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post காஞ்சிபுரம் அருகே நட்சத்திர விருட்ச விநாயகருக்கு முந்நீர் அபிஷேகம்: பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: