வெளிநாடுகளில் இருந்து நிதி கேரளாவில் 12 இடங்களில் ரெய்டு

திருவனந்தபுரம்: வெளிநாடுகளில் இருந்து பெருமளவு நிதி வந்தது குறித்து டெல்லியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று மத்திய அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பை கடந்த வருடம் ஒன்றிய அரசு தடை செய்தது. இந்த அமைப்புக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பெருமளவு நிதி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நாடு முழுவதும் மத்திய அமலாக்கத் துறையினர் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள், நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் டெல்லியில் நடத்திய சோதனையில் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு நிதி வந்ததற்கான ஆவணங்கள் சிக்கின. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் கேரளாவைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வீடுகள், நிறுவனங்களில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த மாவட்டங்களில் 12 இடங்களில் நேற்று காலை தொடங்கிய சோதனை இரவு வரை நடைபெற்றது.

The post வெளிநாடுகளில் இருந்து நிதி கேரளாவில் 12 இடங்களில் ரெய்டு appeared first on Dinakaran.

Related Stories: