அமெரிக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறி இன்போசிஸ் தலைவரின் பெயரில் மோசடி: 2 பெண்கள் மீது வழக்குபதிவு

பெங்களூரு: இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தியின் பெயரில் மோசடி செய்த இரு பெண்கள் மீது பெங்களூரு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவராக சுதா மூர்த்தி இருந்து வருகிறார்.

இந்தாண்டு இறுதியில் அமெரிக்காவில் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுதா மூர்த்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள முடியாது என்று சுதா மூர்த்தி தெரிவித்துவிட்டார். ஆனால் திட்டமிட்டபடி ஆக. 20ம் தேதி அமெரிக்காவில் நடக்கும் நிகழ்ச்சியில் சுதா மூர்த்தி கலந்து கொள்வார் என்பது போன்ற அழைப்பிதல் அச்சடிக்கப்பட்டு டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு நபரிடம் இருந்தும் தலா 40 அமெரிக்கன் டாலர் வசூலித்துள்ளனர்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த சுதா மூர்த்தி, சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான லாவண்யா, ஸ்ருதி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சுதா மூர்த்தியின் நிர்வாக உதவியாளர் மம்தா சஞ்சய் என்பவர், ஜெயநகர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட லாவண்யா, ஸ்ருதி ஆகிய இரு பெண்கள் மீதும் ஐபிசி 419, தகவல் சட்ட பிரிவுகள் 66 (சி), 66 (டி) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post அமெரிக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறி இன்போசிஸ் தலைவரின் பெயரில் மோசடி: 2 பெண்கள் மீது வழக்குபதிவு appeared first on Dinakaran.

Related Stories: