காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி பகுதியில் ஆமை வேகத்தில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிகள்

*குளம் போல் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

காவேரிப்பாக்கம் : ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா டோல்கேட் பகுதியில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் டோல்கேட் வரை, தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் சாலையின் இரண்டு பக்கமும் உள்ள விவசாய நிலங்கள், வீடுகள், கடைகள்,கோயில்கள், ஆகியன அகற்றப்பட்டு தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமைதாங்கி ஜங்ஷன், துரைபெரும்பாக்கம், துரைபெரும்பாக்கம் ஜங்ஷன், ஈராளச்சேரி ஜங்ஷன், ஓச்சேரி பஸ் நிறுத்தம், களத்தூர் ஜங்ஷன், பெரும்புலிப்பாக்கம் ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் பணிகள், தொடங்கப்பட்டு, தற்போது முடியும் தருவாயில் உள்ளன. இதனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சார்பில் அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்து வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஓச்சேரி பஸ் நிறுத்தம் எதிரே மேம்பால பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் கனரக வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்படுகிறது. அப்போது பேருந்துகளில் இருந்து பயணிகளை சாலையிலேயே இறக்கி விடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, கனரக வாகனங்கள் அணிவகுத்து, ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன.

மேலும் ஓச்சேரி பஸ் நிறுத்தம் பகுதியில் எண்ணற்ற கனரக வாகனங்கள் செல்வதால் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு தற்போது பெய்து வரும் மழையால் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கின்றன. இதனால் இப்பகுதி கொசுக்களின் கூடாரமாக மாறி டெங்கு, மலேரியா, உள்ளிட்ட நோய்கள் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இப்பகுதி பொது மக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகிறனர்.

எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஓச்சேரி பகுதியில் நடைபெற்று வரும், மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், ஓச்சேரி பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து சந்தைமேடு வழியாக உத்திரம்பட்டு செல்லும் முகப்பு பகுதியில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பிறகு இந்த பள்ளத்தை மூடவில்லை. இதனால் இரவு நேரங்களில் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரில் செல்வோர், முகப்பு பகுதியில் உள்ள பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே அந்த பள்ளத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி பகுதியில் ஆமை வேகத்தில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: