.
“உழவன் எத்தனை சிரமப்பட்டு உழைத்தாலும் வருமானம் என்பது குறைந்த அளவில்தான் கிடைக்கிறது. இதை மாற்ற வேண்டும் என அடிக்கடி எண்ணுவேன். எம்.பி.ஏ., படித்தாலும் விவசாயத்தை நாம் விட்டுவிடக்கூடாது என தெளிவாக இருந்தேன். வேறு ஏதாவது தொழில் செய்வதை விட்டுவிட்டு ஏன் விவசாயம் செய்கிறாய்? என்று கூட எனது உறவினர்கள் கேட்பார்கள். அவர்களுக்கு விவசாயமும் ஒரு லாபகரமான தொழில்தானே, இயற்கை முறையில் விவசாயம் செய்து நல்ல லாபம் பெறலாமே என்பதை புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டினேன்.
இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் அய்யாவுடன் சில ஆண்டுகள் பயணம் செய்தேன். இந்தப் பயணத்தில் பஞ்சகவ்யா, மூலிகை பூச்சிவிரட்டி, மீன் அமிலம் என்று இயற்கை முறையில் விவசாயம் செய்து நஞ்சில்லாத உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற குறிக்கோள் ஏற்பட்டது. நம்பிக்கையுடன் அயராத உழைப்பை கொடுத்தால் இயற்கை விவசாயம் நம்மை மேலே உயர்த்தும் என்பதில் எனக்கு உச்சபட்ச நம்பிக்கை. அது இன்று நிரூபணம் ஆகி இருக்கிறது. எங்கள் நிலத்தில் 15 ஏக்கரில் இயற்கை வழியில் தென்னை மரங்கள், 10 ஏக்கரில் நிலக்கடலை, எள் ஆகியவற்றை பயிரிட்டேன். ரசாயன உரங்கள் இன்றி பஞ்சகவ்யா, மூலிகை பூச்சி விரட்டி என நம்மாழ்வார் அய்யாவின் வழிகாட்டுதலை நினைவில்கொண்டு செயல்பட்டேன். சாதாரணமாக ரசாயன உரம் தெளித்தால் கிடைக்கும் விளைச்சலை விட இயற்கை முறையில் சாகுபடி செய்ததால் 25 சதவீதம் வரை கூடுதல் விளைச்சல் கிடைத்தது.
தாத்தா காலத்தில் வைத்த தென்னை மரங்கள் இன்னும் எங்கள் நிலத்தில் இருக்கிறது. கஜா புயல் வந்தபோது பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. அப்போது கன்றாக இருந்த மரங்கள் சாயவில்லை. அவை இப்போது பலன் தருகின்றன. மேலும் நாங்கள் புதிதாக கன்றுகளை நட்டு மரங்களாக உருவாக்கி இருக்கிறோம். தென்னையில் வெயில் காலம் என்றால் 45 நாளில் அறுவடை எடுக்கலாம். அப்போது வெயிலில் காய்கள் காய்ந்து விரைவில் அறுவடைக்கு வந்துவிடும். மற்ற சமயங்களில் 60 நாட்களில் அறுவடைக்கு வரும். கஜா புயலுக்கு முன்பு ஒரு அறுவடையில் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். இப்போது 5 ஆயிரம் முதல் 7 கிலோ மட்டுமே மகசூலாக கிடைக்கிறது. சராசரியாக 5 ஆயிரம் கிலோ கிடைக்கும். 5 ஆயிரம் கிலோ தேங்காயை விற்பனை செய்தால் கிலோவுக்கு ரூ.10 என ரூ.50 ஆயிரம் மட்டுமே வருமானம் கிடைக்கும். இதைவிட கூடுதல் வருமானம் பார்க்க வேண்டும். அதுவும் மக்களுக்கு நல்ல முறையில் பயன்பட வேண்டும் என நினைத்தேன்.
அப்போதுதான் தேங்காயை எண்ணெயாக மதிப்புக்கூட்டினால் என்ன? என்று யோசித்தேன். நாம் செய்வது இயற்கை விவசாயம். இதில் இருந்து எண்ணெய் எடுத்தால் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என நினைத்து அதை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டேன். எண்ணெயை இயந்திரம் மூலம் பிழியக்கூடாது நமது பாரம்பரியமிக்க நல்வாகை கல் செக்கை அமைக்க வேண்டும் என அதை அமைத்தேன். அதில் காங்கேயம் மாடுகளை வைத்து இயக்கி எண்ணெய் எடுக்கிறேன். இப்படி மாட்டு கல்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது கொஞ்சம் கூட எண்ணெய் சூடாவதில்லை. இதனால் அதில் உள்ள உயிர்ச்சத்துக்கள் முழுமையாக அப்படியே இருக்கும். உணவும் ருசிக்கும், உடலுக்கும் ஆரோக்கியம். நல்லெண்ணெய் ஆட்டும்போது கருப்பட்டியும், தேவைக்கேற்ப வெல்லமும் சேர்க்கப்படுகிறது.
தேங்காயைப் போல நிலக்கடலை, எள் ஆகியவற்றையும் பயிரிட்டு எண்ணெய் பிழிகிறேன். நிலக்கடலையைப் பொறுத்தவரை சராசரியாக ரூ.90 விலையாக கிடைக்கும். 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை நிலக்கடலைக்கு அதிகபட்சமாக ரூ.4500 விலையாக கிடைக்கும். அதையே எண்ணெயாக மாற்றி விற்கும்போது பல மடங்கு லாபம் கிடைக்கும். ஒரு மூட்டை நிலக்கடலை மூலம் 22 லிட்டர் எண்ணெய் பிழியலாம். ஒரு லிட்டர் எண்ணெய் இப்போது ரூ.360க்கு விற்கப்படுகிறது. 22 லிட்டர் எண்ணெய் மூலம் ரூ.7920 வருமானமாக கிடைக்கும். இதில் 50 கிலோ புண்ணாக்கு கிடைக்கும். 1 கிலோ புண்ணாக்கு ரூ.25க்கு விற்கப்படுகிறது. புண்ணாக்கு மூலம் ரூ.1250 வருமானமாக கிடைக்கும்.
எள்ளை எண்ணெயாக மாற்றி விற்றால் பல மடங்கு லாபம் கிடைக்கிறது. ஒரு கிலோ எள் ரூ.90 முதல் 100 வரை விலை வைத்து விற்கப்படுகிறது. சராசரியாக ரூ.100 கிடைத்தால் கூட 50 கிலோ கொண்ட மூட்டைக்கு 5 ஆயிரம்தான் விலை கிடைக்கும். 1 மூட்டை எள்ளை செக்கில் ஆட்டினால் 20 லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டர் நல்லெண்ணெய் தற்போது ரூ.550க்கு விற்கப்படுகிறது. 20 லிட்டர் எண்ணெய் மூலம் ரூ.11 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. இதில் 25 கிலோ புண்ணாக்கு கிடைக்கும். ஒரு கிலோ புண்ணாக்கு ரூ.30 என விற்கிறது. இதன்மூலம் ரூ.750 வருமானமாக கிடைக்கிறது. எண்ணெய் மற்றும் புண்ணாக்கு மூலம் ஒரு மூட்டைக்கு ரூ.11,750 கிடைக்கிறது. ஏக்கருக்கு எப்படியும் 3 மூட்டை எள் மகசூலாக கிடைக்கும். இதன்மூலம் 35,250 வருமானமாக கிடைக்கிறது.
இந்தியா முழுக்க தற்போது சமையல் எண்ணெய்களுக்கு நல்ல கிராக்கி இருக்கிறது. இதனால் எண்ணெயை விற்பனை செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. அதுவும் இயற்கை முறையில் விளைவித்து, எண்ணெய் பிழிவதால் நாங்கள் பிழியும் எண்ணெய்க்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. நம்மாழ்வார் வழியில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களிடம் இருந்து தேங்காய், கடலை, எள் போன்றவற்றையும் கொள்முதல் செய்து அவர்களுக்கும் நல்ல வருமானத்தை அளித்து வருகிறோம். அன்னமிளகி, அறுபதாங்குறுவை, பூங்கார், கேரளசுந்தரி, குழியடிச்சான் (குழி வெடிச்சான்), குள்ளங்கார், மைசூர்மல்லி, குடவாழை, கட்டுடை ஓனான் என்ற காட்டுயானம், காட்டுப்பொன்னி, வெள்ளைக்கார், மஞ்சள் பொன்னி, கருப்புச் சீரகச்சம்பா, கட்டிச்சம்பா, குருவிக்கார், வரப்புக் குடைஞ்சான், குறுவைக் களஞ்சியம் இப்படி ஏகப்பட்ட நெல் ரகங்கள் நம் முன்னோர்கள் பயிரிட்டிருக்கிறார்கள். இதுபோன்ற நெல் வகைகளைப் பயிரிட தற்போதைய தலைமுறை ஆர்வம் காட்டி வருகிறது. எனக்கும் இந்த ஆர்வம் இருப்பதால் பாரம்பரிய ரக நெல்பயிர்களை பயிரிட இருக்கிறேன். அவற்றையும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறேன். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அப்படியே விற்காமல், இதுபோல் மதிப்புக்கூட்டி விற்க வேண்டும். அப்போதுதான் நாம் படும் கஷ்டங்களுக்கு உண்மையான பலன் கிடைக்கும்’’ என கூறி முடிக்கிறார்.
தொடர்புக்கு: சரவணன்,
செல்: 80983 64342
The post தென்னை, எள், நிலக்கடலை… மதிப்புக்கூட்டினால் மகத்தான வருமானம்! appeared first on Dinakaran.
