தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

*கர்நாடக முதல்வர் உருவபொம்மை எரிப்பு

திருச்சி : சுப்ரீம் கோர்ட் மற்றும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடாத கார்நாடக மாநில விவசாயிகள் தமிழ்நாடு முதல்வரின் உருவப்படத்தை எரித்ததை கண்டித்து, கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவப்படத்தை நேற்று காவிரி ஆற்றுக்குள் நின்றபடி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு மற்றும் அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் எரித்தனர்.

திருச்சியில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்றரை மாதங்களாக திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் காவிரியில் அணை கட்டக்கூடாது, விவசாய விளை பொருட்களுக்கு மும்மடங்கு விலை தரவேண்டும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை உடன் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு பேராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் காவிரி தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இருப்பினும் கர்நாடக அரசு இதுவரை தண்ணீர் திறக்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக்கூடாது எனக்கூறி கர்நாடகாவில் விவசாயிகள் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் இதுபோன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதல்வரின் உருவப்படத்தை சிலர் எரித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருச்சியில் காத்திருப்பு போரட்டம் நடத்தி வரும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையிலான அச்சங்கத்தினர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் உருவப்படத்தை எரித்த கர்நாடக அரசுக்கு கண்டனங்களை தெரிவித்ததுடன், ஆற்றின் கரையோரம் இருந்த நாணல்களில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவப்பொம்மையை எரித்தனர்.

இதுகுறித்து விவசாயி அய்யாக்கண்ணு கூறியதாவது: ஒன்றிய அரசு கபட நாடக வேஷம் தரிக்கிறது. ஒன்றிய அரசு நினைத்தால் காவிரியில் தண்ணீர் திறக்க வழிவகை செய்ய முடியும். கர்நாடக அரசு தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை மதிக்காமல் காற்றில் பறக்கவிட்டு வருகிறது. இதை தட்டிக்கேட்க வேண்டிய ஒன்றிய அரசு மவுனம் காக்கிறது. உடன் கர்நாடக அரசு மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கு இந்த பருவத்தில் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும்.

கர்நாடகாவில் தமிழ்நாடு முதல்வரின் உருவப்படத்தை எரித்ததை கண்டித்து கர்நாடக முதல்வரின் உருவப்பொம்மையை எரித்தோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தண்ணீர் திறக்காத கர்நாடக அரசின் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு பதிவதுடன், தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை உடன் திறந்துவிட சுப்ரீம் கோர்ட் மற்றும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: