திருச்சி அருகே துணிகரம் துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டில் 52 பவுன் கொள்ளை

*மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

திருவெறும்பூர் : திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 52 பவுன் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி அடுத்த நவல்பட்டு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர் (45). திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்புதுறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா (40), அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் நாமக்கல்லில் தங்கி படித்து வருகிறார். கடந்த 22ம் தேதி பாலசந்தர், கேரளா மாநிலம் திருச்சூர் சென்றுள்ளார். அவரது மனைவி ரேணுகாவும் நேற்றுமுன்தினம் காட்டூருக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை பாலசந்தர் வீடு திறந்து கிடந்ததை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள், ரேணுகாவுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ரேணுகா வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது இரண்டு பீரோவில் வைத்திருந்த பொருட்கள் சிதறி கிடந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கொள்ளை சம்பவம் குறித்து நவல்பட்டு காவல் நிலையத்திற்கு ரேணுகா தகவல் கொடுத்தார். திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் லீலி, வீட்டில் பல இடங்களை மோப்பம் பிடித்து பின்னர் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம்வரை சென்று மெயின் ரோட்டில் நின்றது.

வீட்டில் பீரோவில் வைத்திருந்த செயின், மோதிரம், நெக்லஸ், பிரேஸ்லெட், வளையல், தோடு உள்பட மொத்தம் 52 பவுன் நகைகளும், வெள்ளி சந்தன கும்பா, வெள்ளி குங்குமசிமிழ், வெள்ளி விளக்கு, கொலுசு, வெள்ளி தாம்பூலம் என 1 கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளை போனது தெரியவந்தது. இந்த கொள்ளை போன தங்கநகைகளின் மதிப்பு ₹25லட்சம் என கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

The post திருச்சி அருகே துணிகரம் துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டில் 52 பவுன் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: