வேலூர், செப்.25: கோடை விடுமுறையில் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி மையத்தில் பணியாற்றிய முதுகலை ஆசிரியர்களுக்கு 6 நாட்களுக்கு மிகாமல் ஈடு செய்யும் விடுப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டு இருக்கும் பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனைக்குழு கடந்த 6.05.2023 முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு பிளஸ்2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், உயர்கல்வி சார்ந்த தகவல்கள், விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தல், கல்லூரிக் கட்டண ஏற்பாடுகள் என பல்வேறு உதவிகளை பள்ளிகளின் வாயிலாக செய்யப்பட்டது.
அனைத்து மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள், 08.05.2023 முதல் குறைந்தது 2 பேர் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அவ்வாறு விடுமுறை நாள்களில் பள்ளிகளுக்கு வருகை புரிந்து மாணவர்களின் உயர்கல்விக்கு உதவிய அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் அவர்கள் பணிபுரிந்த நாள்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும் நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் கோரிக்கையின் படியும், தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறும் விடுமுறை நாள்களில் பள்ளிகளுக்கு வருகை புரிந்து, மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கு உதவிய அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும், அவர்கள் கோடை விடுமுறையில் பணிபுரிந்த நாள்களுக்கு மட்டும் அதிகபட்சமாக 6 நாள்களுக்கு மட்டும் ஈடு செய்யும் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது.
மேலும் அவ்விடுப்பினை மொத்தமாக எடுக்காமல் அவ்வப்போது ஒரு நாள் வீதம், விதிகளின்படி 6 மாத கால அவகாசத்திற்குள் எடுக்க வேண்டும். இது சார்ந்த ஈடுசெய் விடுப்பு ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தால் அவ்விடுப்பு போக மீதமுள்ள நாள்களுக்கு மட்டும் விடுப்பு வழங்குமாறும் அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
The post கோடை விடுமுறையில் பணியாற்றிய முதுகலை ஆசிரியர்களுக்கு 6 நாள் விடுப்பு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.