வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் மாநகரில் ₹350 கோடியில் 1,500 சாலைகள் சீரமைப்பு

சேலம், செப்.25: வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் மாநகரில் ₹350 கோடியில் 1500 சாலைகளை சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம் மாநகரில் பாதாள சாக்கடை குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் முக்கிய சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இந்த சாலைகளை உடனே சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ₹1000 கோடியில், ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட், மல்டி லெவல் கார் பார்க்கிங், ஸ்மார்ட் சாலை உள்பட 85க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், மாநகராட்சியில் 12 ஆண்டுக்கு மேலாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பாதாள சாக்கடை பணியால், மாநகரில் பல சாலைகள் குண்டும் குழியுமாகவும் காணப்படுகிறது.

இதேபோல், குடிநீர் குழாய் பதிப்பு பணி, காஸ் இணைப்பு திட்டத்திற்கும் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளால் மாநகரில் முக்கிய சாலைகள் முதல் பொது மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை வரை வெட்டி வீசப்பட்டு கிடக்கிறது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்துள்ள பகுதிகளில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சேலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், சேலம் மாநகரில் தாழ்வான இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீரும் 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் புகுந்தது. நீர் வழித்தடங்களில் தண்ணீர் தேங்கி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழையால் சாலைகளில் கற்கள் பெயர்ந்து, பல்லாங்குழியாக காட்சி அளிக்கிறது.

அதிலும், புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளிலும் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. தொங்கும் பூங்கா சாலை, கலெக்டர் அலுவலக சாலை, அம்மாபேட்டை திருவிக ரோடு, சின்ன கடை வீதி, அம்மாப்பேட்டை மிலிடெரி ரோடு, அங்கம்மாள் காலனி, புதிய பஸ் ஸ்டாண்ட், குகை மெயின் ரோடு, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை பகுதிகளில் முக்கியஇடங்களில் சாலைகளில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த சாலைகள் வழியாக வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. அதற்குள் தற்போது மழையால் சேதமடைந்த சாலைகளை உடனே மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் எந்தந்த சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். சேதமடைந்துள்ள முக்கிய சாலைகளை, மழை நின்றதும் சீரமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாநகரில் பல்வேறு திட்ட பணிகளால் சாலைகள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும்சாலைகள்அமைக்கப்பட்டு வருகிறது. மாநகரில் 1500 சாலைகளை மறு சீரமைப்புசெய்யப்பட்டு வருகிறது. 15வது நிதி குழு, தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம், மாநில நிதிகுழு, மண்சாலை தார் சாலை திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் இருந்து ₹350 கோடி நிதி பெறப்பட்டு, 800க்கும் மேற்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 600 சாலைகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீர் வரத்து கால்வாய்கள், ஓடைகளில் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை கண்டறிந்து, அந்த சாலைகளை உடனே சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழுதடைந்த சாலைகள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். அதோடு பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்,’’ என்றனர்.

The post வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் மாநகரில் ₹350 கோடியில் 1,500 சாலைகள் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: