மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 6 மாதத்தில் 180 வழக்குகளில் தீர்ப்பு

நாமக்கல், செப்.25: நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், 6 மாதங்களில் 180 வழக்குகளில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதனால் இணையதள விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது என நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், நுகர்வோர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், கடந்த 6 மாதங்களில் 180 வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், கடந்த 2018ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், விரைவான விசாரணைக்காக, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு, கடந்த 2022 ஜூலையில் அனுப்பி வைக்கப்பட்டன. 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்து, கோவையில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட 84 நுகர்வோர் வழக்குகள், நாமக்கல் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 33 நுகர்வோர் வழக்குகள் உட்பட 180 நுகர்வோர் வழக்குகளில், விரைவாக விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கு தொடர்ந்த நுகர்வோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் ராமராஜ் கூறியதாவது:
கோவையில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட வழக்குகள் மீது, தினமும் மதியம் இணையதளம் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. மாற்றம் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிலும் தீர்வு காணப்பட்டு விட்டதால், இணையதள விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த இணையதள விசாரணை முகவரி இனி இயங்காது. அதே சமயம், புதிதாக நுகர்வோர் வழக்குகளையும், தீர்ப்பை நிறைவேற்றும் மனுக்களையும், நுகர்வோர் பல்வகை மனுக்களையும், கட்டாயம் இணையதளம் மூலமே தாக்கல் செய்யும் நடைமுறை தொடரும். கடந்த 6 மாத காலத்தில், தீர்ப்பை நிறைவேற்ற கோரும் 27 மனுக்களிலும், 90 நுகர்வோர் பல்வகை மனுக்களிலும் தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள், 2 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள நுகர்வோர் வழக்குகள் அனைத்திலும், தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு வழக்கு தாக்கல் செய்துள்ளவர்களும், எதிர் தரப்பினர்களும் வழக்குகளை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த 6 மாத காலத்தில், 13 நுகர்வோர் வழக்குகள் மற்றும் நிறைவேற்றுகை மனுக்களில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி அமைக்கப்பட்ட சமரச மையத்தின் மூலமாக, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது.

தற்போது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில், வழக்குகளை சமரச மையத்தில் கையாள்வது குறித்த பிரிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, கடந்த 15ம் தேதி முதல் அனைத்து வகையான நுகர்வோர், சிவில், கிரிமினல் உள்ளிட்ட அனைத்து வகையான வழக்குகளையும் சமரசம் செய்து கொள்வதற்கான, புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

புதிய சட்டத்தின்படி, தமிழகத்திலேயே முதல் முறையாக, வரும் 26ம் தேதி, 53 வழக்குகள் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், சமரச நடவடிக்கைகளுக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கு தாக்கல் செய்துள்ளவர்கள் மற்றும் எதிர் தரப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சமரச பேச்சுவார்த்தைக்காக, 8 வழக்கறிஞர்கள் மத்தியஸ்தர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கு தாக்கல் செய்துள்ளவர்களும், எதிர் தரப்பினர்களும் சமரச பேச்சுவார்த்தைக்கு வருகை தந்து, தீர்வு காண ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி ராமராஜ் கூறினார்.

The post மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 6 மாதத்தில் 180 வழக்குகளில் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: