அனைத்து துறைகளிலும் மோடி அரசு தவறான நிர்வாகம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த வாரம் வெளியான சில உண்மைகள் மூலம், ஒன்றிய பாஜ அரசு மக்களின் கவனத்தை பல வழிகளிலும் திசை திருப்ப முயற்சிப்பது தெளிவாகி உள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட செப்டம்பர் மாத அறிக்கையில், கொரோனா பாதிப்பிலிருந்து பாஜ அரசு மீள்வதில் முழுமையான தோல்வியை அடைந்துள்ளதை காட்டுகிறது. 2020ல் 43 சதவீத மக்கள் தொழிலாளராக இருந்த நிலையில், 3.5 ஆண்டுக்குப் பிறகு இது 40 சதவீதமாக குறைந்துள்ளது. அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழக அறிக்கையில், 2021-22ம் நிதியாண்டில் நாட்டில் 25 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகளில் 42 சதவீதம் பேர் வேலையின்றி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு முன்பாக இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில், 2022ல் பெண்கள் தங்கள் வருவாயில் 85 சதவீதத்தை மட்டுமே ஈட்டுகின்றனர். தற்போது நாட்டில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறி வரும் நிலையில், ஒன்றிய பாஜ அரசு பொது வெளியில் இருந்து இத்தகவல்களை மறைக்க முயற்சிக்கிறது. தக்காளி விலையை தொடர்ந்து துவரம் பருப்பு விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. விலைவாசி உயர்வு பொருளாதாரத்தை நிர்வகிக்க மோடி அரசின் இயலாமையை காட்டுகிறது. 2022ல் தொழில்துறையின் மொத்த லாபத்தில் வெறும் 20 நிறுவனங்களே 80 சதவீத லாபத்தை பெற்றுள்ளதாக மார்செல்லசின் அறிக்கை கூறுகிறது.

எனவே அனைத்து துறையிலும் அரசின் தவறான நிர்வாகத்தால், சாமானிய மக்களும், சிறு, குறு தொழில் துறையினரும், இளைஞர்களும் கடுமையான இன்னல்களை சந்திக்கின்றனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post அனைத்து துறைகளிலும் மோடி அரசு தவறான நிர்வாகம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: