பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’தில் நேற்று பேசியதாவது:
சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு, இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது ஒவ்வொரு இந்தியனின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி உள்ளது. இந்த இரு சாதனைகள் பற்றிதான் இப்போது எனக்கு ஏராளமான கடிதங்களும், பாராட்டுகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஜி20 அமைப்பில் ஆப்ரிக்க யூனியனை இணைத்ததன் மூலம், இந்தியாவின் தலைமை உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாடு நடத்தப்பட்ட பாரத மண்டபம் கூட இப்போது மிகவும் பிரபலமாகி விட்டது. பலரும் அந்த மண்டபத்தின் முன்பாக ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொள்கின்றனர். இந்தியா வளமான தேசமாக, சிறந்த வர்த்தக சக்தியாக இருந்த பழங்காலத்தில் ‘பட்டுப்பாதை’ எனும் வர்த்தக வழித்தடத்தை பயன்படுத்தி உள்ளது. அதே போல தற்போது இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பாவை இணைக்கும் பொருளாதார வழித்தடத்தை ஜி20 மாநாட்டில் முன்வைத்துள்ளது. இந்த வர்த்தக பாதை அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு உலக வர்த்தகத்தின் அடித்தளமாக இருந்து பயன் அளிக்கக் கூடியது. இந்த பொருளாதார பாதை திட்டம் இந்திய மண்ணில் தொடங்கப்பட்டது என்பதை வரலாறு எப்போதும் நினைவில் கொள்ளும்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாள் அக்டோபர் 2ம் தேதி வர உள்ள நிலையில், ஜி20 மாநாட்டில் உலகத் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதை யாரும் மறக்க முடியாது. இது அவரது கருத்துக்கள் உலகளவில் எவ்வாறு பொருந்துகின்றன என்பதற்கான அங்கீகாரமாகும். மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அக்டோபர் 1ம் தேதி காலை 10 மணிக்கு மாபெரும் தூய்மைத் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் அவரவர் சுற்றுப்புறத்திலோ அல்லது ஏதேனும் பொது இடத்திலோ இந்த தூய்மை இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இது மகாத்மா காந்திக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். அதே போல, வரும் பண்டிகை காலங்களில் காதி பொருட்களையும், உள்ளூர் தயாரிப்புகளையும் மக்கள் வாங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு பேசினார்.
சென்னை ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு
பிரதமர் மோடி மேலும் பேசுகையில், ‘‘உயிர்களிடத்தில் கருணையோடு நடக்க வேண்டும், அவற்றை நமது நண்பர்களாகக் கொள்ள வேண்டும் என்றே நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. பெரும்பாலான நமது தெய்வங்களின் வாகனங்கள் கூட விலங்குகள்-பறவைகள் தான். அந்த வகையில், தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான எம். ராஜேந்திர பிரசாத் இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 25-30 ஆண்டுகளாகவே புறாக்களுக்குச் சேவை புரிகிறார்.
தன்னுடைய வீட்டிலேயே 200க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்க்கிறார். அதே வேளையில் பறவைகளுக்கு உணவு, நீர், ஆரோக்கியம் போன்ற அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறார். இதற்காக கணிசமான பணம் இவருக்குச் செலவாகிறது என்றாலும், தனது சேவையில் உறுதியாக இருக்கிறார். இதுபோன்ற உயரிய நோக்கம் கொண்ட மக்களின் பணியைக் காணும் போது உண்மையிலேயே மிகவும் நிம்மதி ஏற்படுகிறது, சந்தோஷம் உண்டாகிறது. இப்படிப்பட்ட முயற்சிகள் குறித்த தகவல் இருந்தால் அவற்றைக் கண்டிப்பாகப் பகிருங்கள்’’ என்றார்.
The post இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா வழித்தடம் உலக வர்த்தகத்தின் அடித்தளமாக பல நூற்றாண்டுகளுக்கு பயன்தரும்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.